‘பழிவாங்கும் அரசியல்’ - அலுவலக இடிப்பு குறித்து ஜெகன் மோகன் ரெட்டி குற்றச்சாட்டு


அமராவதி: விஜயவாடாவின் தாடேபல்லே மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர்சி கட்சியின் மைய அலுவலகம் சனிக்கிழமை காலை இடிக்கப்பட்டது. கட்டிடம் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து "இது முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பழிவாங்கும் அரசியலின் ஆரம்பம்" என ஒய்எஸ்ஆர்சி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

ஆந்திரப் பிரதேச தலைநகர் மண்டல மேம்பாட்டு ஆணையத்தின் (APCRDA) முதற்கட்ட நடவடிக்கைகளை எதிர்த்து ஒய்எஸ்ஆர்சிபி உயர் நீதிமன்றத்தை நாடியிருந்த போதும் கட்டிடம் இடிக்கப்பட்டிருப்பதாக அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. கட்டிடத்தை இடிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதுகுறித்து, ஜெகன் மோகன் ரெட்டி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஆந்திரப் பிரதேசத்தில் சந்திரபாபு நாயுடு தனது அதிகாரத்தை புதிய நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளார். அந்தச் சர்வாதிகாரி, தாடேபல்லேயில் கிட்டத்தட்ட கட்டி முடிக்கப்பட் ஒய்எஸ்ஆர்சி கட்சியின் மையக் கட்டிடத்தை இடித்துள்ளார்.

உயர் நீதிமன்றத்தின் ஆணை புறக்கணிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் சட்டமும் நீதியும் முற்றிலுமாக மறைந்துவிட்டன. தேர்தலுக்கு பின்னர் வன்முறைச் சம்பவங்களால் ரத்தம் சிந்தவைத்த சந்திரபாபு நாயுடு, இந்தக் கட்டிட இடிப்புச் சம்பவம் மூலம் இந்த ஐந்து ஆண்டுகால ஆட்சி எப்படி இருக்கும் என்ற வன்முறைச் செய்தியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த அச்சுறுத்தல்களுக்கு ஒய்எஸ்ஆர்சி கட்சி அடிபணியாது, பின் வாங்காது.

நாங்கள் மக்களுக்காக, மக்களுடன் இணைந்து கடுமையாக போராடுவோம். சந்திபாபுவின் தவறான செயல்களை கண்டிக்குமாறு நாட்டிலுள்ள ஜனநாயக சக்திகள் நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஜூன் 15-ம் தேதி, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் தாமரை குளம் குடியிருப்புக்கு அருகில் உள்ள நடைபாதையில் இருந்த சில பகுதிகளை கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் (ஜிஹெச்எம்சி) இடித்தது. அண்டைமாநிலமான ஆந்திராவின் முதல்வர் பதவியில் இருந்து ஜெகன் மோகன் வெளியேறிய 10 நாட்களுக்கு பின்னர் இந்த இடிப்புச் சம்பவம் நடந்தது.

இதுகுறித்து ஜிஹெச்எம்சி மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஜெகன் மோகன் இல்லத்தில் டைல்ஸ் பணி மேற்கொள்வதற்காக சுற்றுச்சுவரை ஒட்டி இருந்த கட்டித்தை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர். அகற்றப்பட்ட அந்தப் பகுதி பாதுகாப்பு அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்டு வந்தது" என்று தெரிவித்தார்.