சீன விமான விபத்து: போயிங் 737 ரக விமான விஷயத்தில் சுதாரிக்கும் இந்தியா!


சீனாவில் நேற்று நிகழ்ந்த ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமான விபத்தைத் தொடர்ந்து, போயிங் 737 ரக விமானங்கள் குறித்து மேம்பட்ட கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதாக, இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்திருக்கிறது.

123 பயணிகள் மற்றும் விமானிகள் உள்ளிட்ட 9 விமானப் பணியாளர்கள் என மொத்தம் 132 பேர் பயணம் செய்த நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737-800 ரக விமானம், நேற்று சீனாவின் குன்மிங் பகுதியில் இருந்து குவாங்க்ஸோ நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, திடீரென மலையில் மோதி விபத்துக்குள்ளானது. மீட்புப் பணிகள் நடந்துவரும் நிலையில், இதுவரை யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை. இவ்விபத்தில் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்றே கருதப்படுகிறது.

இந்த விபத்தையடுத்து, போயிங் 737-800 ரக விமானங்கள் அனைத்தையும் தற்காலிகமாக நிறுத்திவைத்திருக்கிறது சீனா. இந்நிலையில் இந்த ரக விமானங்கள் குறித்த ஜாக்கிரதை உணர்வு இந்தியாவுக்கும் ஏற்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத் தலைவர் அருண் குமார், பிடிஐ செய்தி நிறுவனத்திடம் நேற்று பேசியபோது, “விமானப் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான விஷயம். நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்துவருகிறோம். இந்தியாவில் பயன்படுத்தப்படும் போயிங் 737 ரக விமானங்களில் மேம்பட்ட கண்காணிப்பை மேற்கொண்டிருக்கிறோம்” என்றார்.

இந்தியாவில் ஸ்பைஸ்ஜெட், விஸ்தாரா, ஏர் இந்தியா எக்ஸ்ப்ரெஸ் ஆகிய மூன்று விமான நிறுவனங்கள் போயிங் 737 ரக விமானங்களைப் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

x