பிரச்சாரத்தில் கேஜ்ரிவால் பேசியது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்: அமித் ஷா விமர்சனம்


புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கருத்துகள் உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அமித் ஷா கூறியுள்ளதாவது: கேஜ்ரிவால் பிரச்சாரத்தில் பேசிய கருத்துகள் பொருத்தமற்றவையாகவும், அது உச்ச நீதிமன்றத்தின் செயல்பாட்டை தவறாக சித்தரிப்பதாகவும் உள்ளது. உச்ச நீதிமன்றத்துக்கு இதை விட வேறொரு பெரிய அவமதிப்பு இருக்க முடியாது.

தேர்தலின் வெற்றி தோல்விதான் உச்ச நீதிமன்றத்தின் செயல்பாட்டை நிர்ணயிக்குமா? அதன் அடிப்படையில் குற்றங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் முடிவுகளை எடுக்குமா?. இதை நான் சொல்லவில்லை. கேஜ்ரிவால் சொல்கிறார்.

அவர் உச்ச நீதிமன்றம் குறித்து கூறிய கருத்தை நான் நேரடியாக கேட்கவில்லை. செய்தித்தாள்களில் படித்தாக நீங்கள்தான் சொன்னீர்கள். அது உண்மையாக இருந்தால் உச்ச நீதிமன்றத்தின் செயல்பாட்டை அவமதிக்கும் வகையில் பேசியிருப்பது மிகவும் தவறான கருத்து. பிரச்சாரத்தில் கேஜ்ரிவாலைப் பார்க்கும்போதெல்லாம் மக்களுக்கு அவர் செய்த மதுபான ஊழல்தான் நினைவுக்கு வரும். கேஜ்ரிவாலை பார்த்தாலே அவர் முன் பெரிய மதுபான பாட்டில்தான் மக்களுக்கு தெரியும் என்று நகைச்சுவையாக அமித்ஷா பேட்டியில் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானுடன் இணைந்து அமிர்தசரஸில் நடைபெற்ற ரோடு ஷோவில் கேஜ்ரிவால் கலந்துகொண்டு பேசுகையில், “நீங்கள் எனக்கு வாக்களித்தால் நான் சிறைக்கு செல்ல வேண்டியதில்லை. உங்களின் வாக்குதான் எனது விடுதலையும், சிறைவாசத்தையும் தீர்மானிக்கும்’’ என்றார்.

இந்த நிலையில், அவரது இந்த கருத்து உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பது போல் உள்ளது என அமித் ஷா விமர்சனம் செய்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட ஏதுவாக கேஜ்ரிவாலுக்கு ஜூன் 1-ம் தேதி வரை ஜாமீன் வழங்கி மீண்டும் அவர் ஜூன் 2-ம் தேதி சரணடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மக்களவை தேர்தலின் ஆறாவது கட்டமான மே 25-ம் தேதி டெல்லியில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.