பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மகத்தான வெற்றியைப் பெற்றதன் காரணங்களில் ஒன்று, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக அக்கட்சி முன்வைத்த தேர்தல் அறிக்கை. தங்களுக்கு வெற்றி தேடித்தந்த அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடிவுசெய்திருக்கிறது ஆம் ஆத்மி அரசு.
அதன்படி, முதல் அமைச்சரவைக் கூட்டத்தின் முதல் முடிவாக 25,000 வேலைவாய்ப்புகளை வழங்குவதாக அறிவித்திருக்கிறார் முதல்வர் பகவந்த் மான். காவல் துறையில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. அத்துடன் அரசுத் துறையின் பல்வேறு பிரிவுகளில், வாரியங்கள், கார்ப்பரேஷன்களில் பணிபுரியும் வாய்ப்பைப் பெறுகிறார்கள் பஞ்சாபியர்கள்.
இதுகுறித்த அறிவிப்பை இன்று காணொலி மூலம் தெரிவித்திருக்கிறார் முதல்வர் பகவந்த் மான்.
அனைத்துப் பணிகளும் தகுதி அடிப்படையிலேயே வழங்கப்படும் என்றும், பாரபட்சத்துக்கோ பரிந்துரைக்கோ இடமில்லை என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.