பெகாசஸை வாங்கச் சொல்லி பேரம் பேசினார்கள்: மம்தா வெளியிட்ட புதிய தகவல்


பெகாசஸ் விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. இம்முறை இது குறித்துப் பரபரப்பைக் கிளப்பியிருப்பவர் மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி.

கொல்கத்தாவில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா, “5 வருடங்களுக்கு முன்பு எங்கள் காவல் துறையிடம் தங்கள் சாதனங்களை விற்க அவர்கள் வந்தனர். 25 கோடி ரூபாய் பேரம் பேசினர். விஷயம் என்னிடம் வந்தது. இப்படியான சாதனங்களை வாங்க நாங்கள் விரும்பவில்லை என்று நான் சொல்லிவிட்டேன்” என்று கூறினார். மேலும், “அது தேசவிரோத நடவடிக்கைகள், பாதுகாப்பு தொடர்பானது என்றால் வேறு விஷயம். ஆனால், அது அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. அரசு அதிகாரிகள், நீதிபதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும் குறிப்பிட்டார்.

நேற்றும் பெகாசஸ் குறித்து மம்தா பேசியிருந்தார். “எனது தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுகிறது. நாங்கள் எதைப் பற்றிப் பேசினாலும் அது அவர்களுக்குத் தெரிந்துவிடுகிறது. மூன்று வருடங்களுக்கு முன்பு பெகாசஸை வாங்கிக்கொள்ளுமாறு என்னிடமும் கோரப்பட்டது. ஆனால், நான் அதை வாங்கவில்லை. அந்தரங்கத்தில் தலையிடுவதையும், பேச்சு சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதையும் நான் ஏற்கவில்லை. ஆனால், பல பாஜக ஆளும் மாநிலங்கள் பெகாசஸை வாங்கின” என்று அவர் கூறியிருந்தார்.

பாஜக குற்றச்சாட்டு

இந்த வேவு மென்பொருளை மம்தா பானர்ஜி, 2016 முதல் பயன்படுத்திவருவதாக பாஜகவைச் சேர்ந்த அநிர்பன் கங்கூலி கடந்த மாதம் கூறியிருந்தார். திரிணமூல் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்குச் சென்ற சுவெந்து அதிகாரி, பாஜகவில் கடும் அழுத்தத்தைச் சந்திப்பதால் மீண்டும் திரிணமூலுக்குத் திரும்புவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் குணால் கோஷ் கூறியதைச் சுட்டிக்காட்டிய அநிர்பன், “சுவெந்து அதிகாரி பாஜகவைவிட்டு வெளியேற விரும்புகிறார் என்று குணால் கோஷுக்கு எப்படித் தெரியவந்தது? அவரது தொலைபேசி உரையாடலை குணால் கோஷ் ஒட்டுக்கேட்டாரா? தொலைபேசியை ஒட்டுக்கேட்க திரிணமூல் காங்கிரஸ் கட்சி பெகாசஸைப் பயன்படுத்துகிறது என்று நம்புகிறேன். 2016 முதல் மம்தா பானர்ஜி பெகாசஸைப் பயன்படுத்திவருகிறார். அவர் தொலைபேசி உரையாடல்களைப் பதிவுசெய்திருந்தால், அவற்றை ஏன் வெளியிடவில்லை? திரிணமூல் காங்கிரஸ் பொய் சொல்கிறது என இதிலிருந்தே தெரிகிறது” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் மம்தாவே இப்படிப் பேசியிருப்பது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இவற்றையும் வாசியுங்கள்:

பெகாசஸ் விவகாரம்: பேசப்படட்டும் உண்மைகள் பெரும் அதிர்வை ஏற்படுத்தும் பெகாசஸ்: உலுக்கியெடுக்கும் புதிய தகவல்கள்

x