நீட் தேர்வு முறைகேட்டில் தனது உதவியாளருக்கு தொடர்பா? - தேஜஸ்வி யாதவ் விளக்கம்


பாட்னா: நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் தனது உதவியாளர் மீது பிஹார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா குற்றம் சாட்டிய நிலையில், இது குறித்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஸ்வி யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.

நிகழாண்டில் நீட் தேர்வில் முறைகேடுகள், குளறுபடிகள் நிகழ்ந்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், "ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவின் உதவியாளர் பிரீதம் குமார், நீட் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான சிக்கந்தர் பிரசாத் யாதவேந்து என்பவருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

சிக்கந்தர் பிரசாத்துக்கு பாட்னா உள்பட பிற பகுதிகளில் விருந்தினர் மாளிகையில் அறைகள் பதிவு செய்து தந்துள்ளார். மேலும், சிக்கந்தருக்கு பிரீதம் குமார் அனுப்பிய குறுஞ்செய்தி தகவல்கள் தன்னிடம் உள்ளது" என பிஹார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில், தனது உதவியாளர் மீதான குற்றச்சாட்டை தேஜஸ்வி யாதவ் மறுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “பொருளாதார குற்றப் பிரிவு, எனது உதவியாளருக்கு (பிரீதம் குமார்) எதிராக எதுவும் கூறவில்லை. விஜய்குமார் சின்ஹா மட்டும் இதை கூறி வருகிறார். தேவைப்பட்டால் பிரீதம் குமாரை அழைத்து விசாரித்துக் கொள்ளலாம் என துணை முதல்வருக்கு கூறிக் கொள்கிறேன். முக்கிய விஷயத்திலிருந்து கவனத்தைத் திசை திருப்ப இவ்வாறு குற்றச்சாட்டுகளை தெரிவிக்கின்றனர்.

நீட் தேர்வு முறைகேட்டில் சிக்கிய அமித் ஆனந்துடன், பாஜக தலைவர் சாம்ராட் சவுத்ரியுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. என் உதவியாளர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர் கைது செய்யப்பட வேண்டும். ஆனால், என் பெயரை சர்ச்சையில் இழுப்பது உங்களுக்கு உதவாது” என்றார்.

சிகந்தர் பிரசாத் யாதவேந்து, நீட் தேர்வு எழுதிய தனது உறவினர் அனுராக் யாதவ், அவரது தாயார் மற்றும் பிறரை, பாட்னாவில் உள்ள அரசு பங்களாவில் தங்க பரிந்துரைத்ததாக கூறியுள்ளார். நீட் தேர்வு முறைகேடுகளில் சிக்கிய அனுராக் யாதவ் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் பீகார் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார், 13 பேரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.