சீனாவைச் சேர்ந்த 16 பேருக்குக் குடியுரிமை: உள் துறை அமைச்சகம் தகவல்!


2007 முதல் சீனாவைச் சேர்ந்த 16 பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டிருப்பதாகவும், 10 பேரின் விண்ணப்பம் நிலுவையில் இருப்பதாகவும் மாநிலங்களவையில் உள் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

சீன அரசுக்கு எதிராக ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்கும் திபெத்தியர்கள், உய்குர்கள், மங்கோலியர்கள் உள்ளிட்டோரில், 2019 முதல் எத்தனை பேருக்கு இந்தியாவில் புகலிடம் வழங்கப்பட்டிருக்கிறது; எத்தனை பேர் குடியுரிமை கோரி விண்ணப்பித்திருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்களை வழங்குமாறு திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு, உள் துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துபூர்வமாகப் பதிலளித்திருந்தார்.

அதில், ‘இதுவரை குடியுரிமை தொடர்பான ஆன்லைன் தரவுகளின்படி, குடியுரிமை கோரி விண்ணப்பித்த சீன தேசத்தவர்கள் 10 பேரின் விண்ணப்பம் நிலுவையில் உள்ளன. மேலும், 2007 முதல் 16 சீனர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டிருக்கிறது’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

1951-ல் அகதிகளின் நிலை தொடர்பான ஐநா உடன்படிக்கையிலும், 1967-ல் உருவாக்கப்பட்ட நெறிமுறையிலும் இந்தியா கையெழுத்திடவில்லை.

இந்நிலையில், ‘வெளிநாட்டினர் சட்டம் 1946, வெளிநாட்டினர் பதிவு சட்டம் 1939, பாஸ்போர்ட் சட்டம் 1920 மற்றும் குடியுரிமை சட்டம் 1955 ஆகியவற்றில் இடம்பெற்றிருக்கும் அம்சங்களின் அடிப்படையில் அனைத்து வெளிநாட்டினரும் (புகலிடம் கோருபவர்கள் உட்பட) நிர்வகிக்கப்படுகின்றனர்’ என உள் துறை அமைச்சகம் கூறியிருக்கிறது. புகலிடம் கோருபவர்கள் தொடர்பான தரவுகள் பராமரிக்கப்படுவதில்லை என்றும் விளக்கமளித்திருக்கிறது.

x