நீட், நெட் வினாத்தாள் கசிவில் ’டார்க்நெட்’ கைங்கரியம்... மத்திய அரசு விசாரணை


இருள் இணையம்

நீட், நெட் உள்ளிட்ட தேசிய நுழைவுத் தேர்வுகளின் பின்னணியில் இருள் இணையத்தின் கைங்கரியம் குறித்தான விசாரணையை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

இளநிலை மருத்துவக் கல்விக்கான நீட், பல்கலைக்கழகங்களுக்கான உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்யும் யுஜிசி-நெட் ஆகிய தேர்வுகளின் வினாத்தாள் கசிவு விவகாரங்கள் பெரிதாக வெடித்துள்ளன. நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை மறுத்து வந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், வினாத்தாள் கசிவின் கீழ் சிலர் கைதானதும் அமைதியானார். அதே போன்று யுஜிசி-நெட் தேர்வின் வினாத்தாள் கசிவு உறுதியானதில், நடந்து முடிந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்துகிறது. நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து மாவட்டத் தலைமையகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துமாறு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நுழைவுத் தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை நோக்கியே தற்போது அனைவரின் விரல்களும் நீண்டுள்ளன. அமைச்சர் தர்மேந்திர பிரதானும், தேசிய தேர்வு முகமை பலப்படுத்தப்படும் என்று உறுதியளித்திருக்கிறார்.

பூஜ்ஜியப் பிழை இல்லாத தேர்வுகளை நடத்துவதில் அரசு உறுதியாக இருப்பதாக அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று உறுதியளித்திருந்தார். தேசிய தேர்வு முகமை தனது செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு உயர்மட்டக் குழுவை உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் வினாத்தாள் கசிவின் பின்னணியில் இருள் இணையமான ’டார்க்நெட்’ பின்னணி இருப்பதை மத்திய அரசு கண்டறிந்துள்ளது. பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள், ஆயுதம், பாலியல், போதை மற்றும் ஆட்கடத்தல் என சகல சட்ட விரோத நடவடிக்கைகளுக்கும் களம் அமைத்திருக்கும் டார்க்நெட் வாயிலாகவே வினாத்தாள் கசிவு அடையாளம் காணப்பட்டுள்ளது.

யுஜிசி-நெட் தேர்வுக்கான வினாத்தாள் இவ்வாறு டார்க்நெட்டில் கசிந்தது தாமதமாகவே தெரிய வந்ததில் அரசு சுதாரித்துக்கொண்டு தேர்வை ரத்து செய்துள்ளது. இந்த டார்க்நெட் வினாத்தள் கசிவின் தொடர்ச்சியாக, டெலகிராம் குழுக்கள் வாயிலாக அவை தொடர்பான சட்ட விரோத வர்த்தகமும் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. இருள் இணையம் வரை வியாப்பித்திருகும் வினாத்தாள் கசிவு விவகாரத்தை தோண்ட தற்போது சிபிஐ களமிறங்கி உள்ளது.