ஸ்ரீநகரில் யோகாசனம் செய்த பிரதமர் மோடி @ சர்வதேச யோகா தினம்


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நடந்த 10-வது சர்வதேச யோகா தினக்கொண்டாட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கி, யோகாசன பயிற்சியில் ஈடுபட்டார். காஷ்மீரின் தால் ஏரி கரையில் உள்ள ஷேர் - இ - காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் (எஸ்கேஐசிசி) இன்று காலை 6.30-க்கு தொடங்க இருந்த நிகழ்வு, நகரில் பெய்த மழையினால் பாதிக்கப்பட்டது. பின்னர் யோகா நிகழ்வு உள்அரங்குக்கு மாற்றப்பட்டது.

மழை நின்ற பின்னர் தால் ஏரியில் எடுத்த புகைப்படங்களை பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்தாண்டு நிகழ்வு இளம் மனங்கள் மற்றும் உடல்களில் யோகாவின் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவதை வலியுறுத்துகிறது. உலக அளவில் ஆரோக்கியம் மற்றும் நலன்களை மேம்படுத்தும் வகையில் யோகா பயிற்சியில் ஆயிரக்கணக்கானோரை ஒன்றிணைப்பதை இந்தக் கொண்டாட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.

பிரதமர் மோடியின் யோகா தின பேச்சு: யோகா தின நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறுகையில், "இந்த நாள் உலகில் ஒரு புதிய சாதனையை உருவக்கியுள்ளது. இந்த யோகா தினத்தில் உலகின் ஒவ்வொரு முலையிலும் யோகாவை பயிற்சி செய்பவர்களுக்கும் நாட்டுமக்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உலக அளவில் யோகாவை பயிற்சி செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

சர்வதேச யோகா தினம் 10 ஆண்டுகள் வரலாற்று பயணத்தை நிறைவு செய்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் நான் சர்வதேச யோகா தினத்தை முன்மொழிந்தேன். இந்தியாவின் இந்த முன்மொழிவை 177 நாடுகள் ஆதரித்தன, இதுவே பெரிய சாதனை. அப்போதிருந்து யோகா தினம் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது.

கடந்த பத்து ஆண்டுகளில் யோகாவின் பரவலாக்கம் அதன் கருத்தை மாற்றியுள்ளது. இன்று உலகம் ஒரு புதிய யோகா பொருளாதாரத்தை முன்னோக்குகிறது. இந்தியாவில், ரிஷிகேஷிலிருந்து, காசி முதல் கேரளா வரை யோகா சுற்றுலா மூலம் ஒரு புதிய இணைப்பு உண்டாகியுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்கள் இந்தியாவின் உண்மையான யோகாவை அறிந்து கொள்ள விரும்புகிறனர்.

யோகா ஒவ்வொருவரது சுயத்துக்கும் சமூகத்துக்குமானது. 10-வது சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடும் இந்தவேளையில், யோகாவை தங்கள் வாழ்வின் ஓர் அங்கமாக மாற்றிக்கொள்ளுமாறு அனைவரையும் நான் வலியுறுத்துகிறேன். யோகா மற்றும சதானா பூமிக்கு வருவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஸ்ரீநகரில் நாம் யோகாவில் இருந்து பெறும் சக்தியை உணர முடியும்.

யோகா வலிமையையும், நல்ல ஆரோக்கியத்தையும் வழங்குகிறது. இந்தாண்டு ஸ்ரீநகரில் நடக்கும் யோகா தினத்தில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

இந்தாண்டு இந்தியாவில் 101 வயது யோகா ஆசிரியைக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அவர் இந்தியாவுக்கு வரவில்லை. ஆனால் யோகா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அவர் தனது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளார். இன்று, பிரபலமான பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களில் யோகா குறித்து ஆராய்ச்சிகள் நடக்கின்றன. ஆய்வுக்கட்டுரைகள் எழுதப்படுகின்றன. இவ்வாறு பிரதமர் பேசினார்.