மபியில் மதுக்கடைகளை அடித்து நொறுக்கிய உமாபாரதி (வீடியோ)


மத்திய பிரதேசத்தில் மதுக்கடையை முன்னாள் பாஜக எம்.பி. உமாபாரதி அடித்து நொறுக்கினார். ஆளும் பாஜக அரசுக்கு எதிராக அவர் களமிறங்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் உமாபாரதி. நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய அமைச்சர், பாஜக துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்து வந்த உமாபாரதிக்கு எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை. ஆனாலும், தொடர்ந்து அரசியல் பணிகளை அவர் செய்து வருகிறார். மத்திய பிரதேச முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் இருந்து வருகிறார்.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி உமாபாரதி தொடர்ந்து வலியுறுத்தி வந்ததோடு, இதற்காக பல போராட்டங்கள், பேரணிகளையும் நடத்தி வந்தார். மேலும், மார்ச் 15-ம் தேதிக்குள் மத்திய பிரதேசத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என மாநில அரசுக்கு கெடு விதித்திருந்திருந்தார். ஆனால், ஆளும் பாஜக அரசு இதை காது கொடுத்து வாங்கவில்லை. அதே நேரத்தில், வெளிநாட்டு மதுபானங்களுக்கான வரியை அரசு கணிசமாக குறைத்தது.

இதனிடையே, அரசின் இந்த நடவடிக்கையால் கொந்தளித்த உமாபாரதி, போபாலில் உள்ள மதுக்கடைக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்று அங்கிருந்த மதுபாட்டில்களை அடித்து நொறுக்கினார். இதன் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளயிட்டுளளார். ஆளும் பாஜக அரசுக்கு எதிராக உமாபாரதி போராட்டத்தில் ஈடுபட்டு வருவது மாநில பாஜக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

x