மகளிர் தினப் பரிசு: பெண் காவலர்களுக்கு 8 மணி நேரப் பணி!


கோப்புப் படம்

மும்பை மாநகரக் காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் இன்று முதல், 8 மணி நேர ஷிஃப்ட் முறையில் பணி செய்யவிருக்கிறார்கள். இதற்கான உத்தரவை மும்பை மாநகரக் காவல் ஆணையர் சஞ்சய் பாண்டே வழங்கியிருக்கிறார். சர்வதேச மகளிர் தினமான இன்று (மார்ச் 8) இது நடைமுறைக்கு வருவது, பெண் காவலர்களுக்கு அளிக்கப்படும் பரிசு எனப் பாராட்டப்படுகிறது.

அதேவேளையில் இது தற்காலிகமான ஏற்பாடுதான். மறு உத்தரவு வரும் வரை, இது அமலில் இருக்கும்.

மகாராஷ்டிர மாநில பொறுப்பு டிஜிபி-யாக இருந்த சஞ்சய் பாண்டே, ஏற்கெனவே ஜனவரி மாதம், பெண் காவலர்களுக்கு இதே போல் 8 மணி நேரப் பணியை வழங்கி உத்தரவிட்டிருந்தார். 12 மணி நேரப் பணிச் சுமையால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெண் காவலர்கள் பாதிப்புகளைச் சந்திப்பதாகவும், குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவழிக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் அவர் விளக்கமளித்திருந்தார். இது சோதனை முறையில் அமல்படுத்தப்படுவதாகவும் அப்போதே அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது வழங்கப்பட்டிருக்கும் புதிய ஆணையின்படி, பெண் காவலர்களுக்கு இரண்டு தெரிவுகள் அளிக்கப்படுகின்றன.

முதல் தெரிவு: காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை அல்லது மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை அல்லது இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை என எதையேனும் ஒரு ஷிஃப்ட்டை அவர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

இரண்டாவது தெரிவு: காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை அல்லது மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை அல்லது இரவு 11 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை.

பணியிடம் மற்றும் குடும்பம் என இரண்டையும் கையாள்வதில் பெண் காவலர்களுக்குப் போதுமான நேரம் கிடைக்கும் என்பதால், இந்த உத்தரவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

x