‘உக்ரைனிலிருந்து நேரடியாக இந்தியர்களை மீட்டிருந்தால் பாராட்டியிருப்பேன்!’


உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்பதில் மத்திய அரசு தோல்வியடைந்துவிட்டதாக சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் விமர்சித்திருக்கிறார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அகிலேஷ் யாதவ், உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்கும் பணிகள் அரசியல் நாடகமாகவே பாஜகவால் கையாளப்பட்டதாகக் குற்றம்சாட்டினார்.

“சர்வதேச அங்கீகாரம் என எதை பாஜகவினர் சொல்கிறார்கள் எனத் தெரியவில்லை. வாராணசியில் வாக்குப்பதிவு இருந்ததால், இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைக்கு ஆபரேஷன் கங்கா என அவர்கள் பெயரிட்டனர். ஆனால், அதில் அவர்கள் தோல்வியடைந்துவிட்டனர். உக்ரைனிலிருந்து நேரடியாக இந்தியர்களை மீட்டிருந்தால் நான் பாஜகவினரைப் பாராட்டியிருப்பேன்” எனக் கூறினார்.

முன்னதாக, ரிபப்ளிக் பாரத் இந்தி சேனலுக்குப் பேட்டியளித்த அகிலேஷ் யாதவ், இளைஞர்களுக்கும் விவசாயிகளுக்கும் மத்திய அரசு துரோகம் இழைத்துவிட்டதாகக் குற்றம்சாட்டினார். இரட்டை இன்ஜின் எனச் சொல்லிச் சொல்லி மத்திய அரசும் உத்தர பிரதேச அரசும் தோல்விகளைத்தான் மக்களுக்குத் தந்திருக்கின்றன என்றும் விமர்சித்தார்.

“கறுப்புச் சட்டங்களைக் கொண்டுவந்து விவசாயிகளின் உயிரிழப்புகளுக்கு பாஜக அரசு வழிவகுத்தது. குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசால் வழங்க முடியவில்லை. மின்சாரக் கட்டணத்தை உயர்த்திவிட்டது. 4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் கிடைக்கும் என பெரிய பெரிய நம்பிக்கை வார்த்தைகளை பாஜகவினர் கூறினர். ஆனால், எந்த முதலீடும் வரவில்லை” என்று அகிலேஷ் யாதவ் கூறினார்.

x