பாலஸ்தீனத்துக்கான இந்தியத் தூதர் திடீர் மரணம்


பாலஸ்தீனத்துக்கான இந்தியத் தூதராகப் பணிபுரிந்துவந்த முகுல் ஆர்யா, ரமல்லா நகரில் உள்ள இந்தியத் தூதரகக் கட்டிடத்தில் இறந்தநிலையில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறார்.

முகுல் ஆர்யா, டெல்லி பல்கலைக்கழகத்திலும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் பொருளாதாரம் பயின்றவர். 2008 முதல் இந்திய வெளியுறவுத் துறையில் பணியாற்றிவந்தார். காபூல், மாஸ்கோ நகரங்களில் உள்ள இந்தியத் தூதரகங்களில் பணியாற்றிய முகுல் ஆர்யா, டெல்லியில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகத்திலும் பணியாற்றியிருக்கிறார். பாரிஸ் நகரில் யுனெஸ்கோவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரநிதியாகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் முகுல்.

அவரது மரணம் குறித்து ட்வீட் செய்திருக்கும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “ரமல்லாவில் இந்தியாவின் பிரதிநிதியாகப் பணியாற்றிவந்த முகுல் ஆர்யா காலமாகிவிட்டதை அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

முகுல் ஆர்யாவின் மரணத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என பாலஸ்தீன அரசு உறுதியளித்திருக்கிறது. அவரது மறைவுக்குப் பாலஸ்தீன வெளியுறவுத் துறை அமைச்சர் ரியாத் அல்-மாலிக்கி இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

இந்திய வெளியுறவுத் துறையிடம் பேசி, அவரது உடலை இந்தியாவுக்குக் கொண்டுவரும் ஏற்பாடுகளைச் செய்துவருவதாகப் பாலஸ்தீன வெளியுறவுத் துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

x