சித்ரா ராமகிருஷ்ணா கைது: மர்ம முடிச்சுகள் அவிழுமா?


பங்குச் சந்தை முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட தேசியப் பங்குச் சந்தை (என்எஸ்இ) தலைமை நிர்வாக அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவை சிபிஐ கைது செய்திருக்கும் நிலையில், இந்த வழக்கில் இருக்கும் மர்மங்களுக்கு விடை கிடைக்கும் என நம்பப்படுகிறது.

2013 முதல் 2016 வரை தேசியப் பங்குச் சந்தை தலைமை நிர்வாக அதிகாரியாகவும் , மேலாண் இயக்குநராகவும் இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணா. என்எஸ்இ-யின் முதல் பெண் தலைமை நிர்வாக அதிகாரி எனும் பெருமையும் அவருக்கு உண்டு. தலைமைச் செயல் அதிகாரியாக ஆனந்த் சுப்பிரமணியனை நியமித்ததில் விதிமீறல் செய்தது, கோ லொக்கேஷன் முறையில் பங்குகளின் ஏற்ற - இறக்கம் தொடர்பான தகவல்களை குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு அளித்தது என்பன உள்ளிட்ட புகார்கள் அவர் மீது பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக 2018-ல் தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ அவரைக் கைது செய்திருக்கிறது.

இமயமலையில் வசிப்பதாக சித்ரா ராமகிருஷ்ணா குறிப்பிட்ட முகம் தெரியா சாமியார் சிரோமணி மின்னஞ்சல் மூலம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் ஆனந்த் சுப்பிரமணியனின் நியமனம், சம்பளம் போன்றவற்றை சித்ரா தீர்மானித்தார் என செபி குற்றம்சாட்டியிருக்கிறது.

பிப்ரவரி 11-ல், இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி, சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்பிரமணியன், தேசியப் பங்குச் சந்தை முன்னாள் மேலாண் இயக்குநர் ரவி நாராயணன் ஆகியோருக்கு அபராதம் விதித்தது.

சித்ரா ராமகிருஷ்ணாவின் மும்பை வீட்டிலும், சென்னையில் உள்ள ஆனந்த் சுப்பிரமணியன் வீட்டிலும் பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டன. ஆனந்த் சுப்பிரமணியன் பிப்ரவரி 25-ல் சென்னையில் கைதுசெய்யப்பட்டார். முன் ஜாமீன் கோரி சித்ரா ராமகிருஷ்ணா தாக்கல் செய்த மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் நேற்று அவரும் கைதுசெய்யப்பட்டார்.

ஆனந்த் சுப்பிரமணியன் தான் ரிக், யஜூர், சாம என மூன்று வேதங்களையும் குறிக்கும் rigyajursama@outlook.com எனும் மின்னஞ்சலை உருவாக்கினார் என சிபிஐ கண்டறிந்திருக்கிறது. அந்த மின்னஞ்சல் மூலமாக அந்த மர்மச் சாமியார் சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்பிரமணியன் ஆகிய இருவருடன் மின்னஞ்சல்களை அனுப்பிவந்ததாகத் தெரிவிக்கிறது சிபிஐ.

என்எஸ்இ-யின் செயல்பாடுகள், முக்கிய முடிவுகள் என எல்லா தகவல்களையும் சாமியாருக்கு அனுப்பியிருக்கிறார் சித்ரா. ஆனந்த் சுப்ரமணியம் நியமிக்கப்பட்டதும் மர்மமான முறையிலேயே நடந்திருக்கிறது. அவருக்கு நேர்காணல் கூட நடத்தப்படவில்லை என என்எஸ்இ-யின் மனித வளப் பிரிவின் ஆவணங்கள் மூலம் தெரியவருகிறது. பங்குச்சந்தையில் எந்த முன் அனுபவமும் இல்லாத ஆனந்த், அதற்கு முன்பு ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றுவந்தவர். ஆனால், என்எஸ்இ-யில் சேர்ந்த பின்னர், அவரது ஆண்டு சம்பளம் 1.68 கோடி ரூபாய் ஆனது. மூன்றே ஆண்டுகளில் அது 4.21 கோடி ரூபாயாக உயர்ந்தது. எப்போது வேண்டுமானாலும் அலுவலகத்துக்கு வரலாம்; எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்றெல்லாம் ஆனந்துக்குச் சலுகைகள் வழங்கப்பட்டன. ஆனந்துக்கு வழங்கப்பட்ட சம்பளம், சலுகைகள் தொடர்பாகக் கேள்விகள் எழுந்தபோது, ‘அவர் ஊழியர் அல்ல; ஆலோசகர் மட்டும்தான்’ எனச் சொல்லி அவருக்கு ஆதரவாக நின்றிருக்கிறார் சித்ரா.

பங்குகளை சுயப் பட்டியல் (செல்ஃப் லிஸ்ட்டிங்) இடுவது தொடர்பாக தொடர்பாக பிரதமர் அலுவலகம், நிதியமைச்சகம், செபி ஆகியவற்றை அணுகுமாறும் சித்ராவை சாமியார் பணித்திருக்கிறார். எனினும், 2016 மே மாதம் சித்ரா தலைமையிலான என்எஸ்இ பரிந்துரைத்த செல்ஃப் லிஸ்ட்டிங்குக்கு செபி அனுமதி மறுத்துவிட்டது.

ஆனந்த் சுப்பிரமணியனின் மனைவி சுனிதா ஆனந்த், சென்னையில் உள்ள தேசியப் பங்குச் சந்தையின் பிராந்தியத் தலைவராகப் பணிபுரிந்தவர். அவருக்குத்தான் சித்ரா ராமகிருஷ்ணா தனது சென்னை வீட்டை விற்றிருக்கிறார் எனச் சமீபத்தில் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ரவி நாராயணன், சித்ரா ராமகிருஷ்ணா

கடந்த 4 வருடங்களாக சித்ரா ராமகிருஷ்ணா மீதான விசாரணையில் மெத்தனமாக நடந்துகொண்டதாக சிபிஐயைக் கண்டித்திருக்கிறது நீதிமன்றம். அதேபோல், செபியும் அவரிடம் கனிவுடன் நடந்துகொண்டதாக சிறப்பு நீதிபதி சஞ்சீவ் அகர்வால் கூறியிருக்கிறார்.

விசாரணையின்போது சித்ரா ராமகிருஷ்ணன் முறையாக ஒத்துழைக்கவில்லை என்றும் கோ லொக்கேஷன் தொடர்பாகத் தனக்கு எந்தத் தகவலும் தெரியாது என மறுத்ததாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இன்று டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் சித்ரா ராமகிருஷ்ணாவும் ஆனந்த் சுப்பிரமணியனும் ஆஜர்படுத்தப்படுகின்றனர். இருவரிடமும் தீவிர விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டிருக்கிறது.

பங்குச் சந்தையின் நுணுக்கமான தகவல்களை அறிந்தவராக அந்தச் சாமியார் இருந்திருக்கிறார். வரி ஏய்ப்பு செய்பவர்களின் புகலிடமாகக் கருதப்படும் செஷல்ஸ் தீவுக்குச் செல்வது குறித்து சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு அவர் அனுப்பிய மின்னஞ்சல்களைப் பார்க்கும்போது அந்தத் துறையில் ரொம்பவே அனுபவம் வாய்ந்த ஒருவர் என்றே கணிக்கப்படுகிறது. எனினும், இதுவரை அந்தச் சாமியார் யார் என்பது குறித்த அனுமானங்களுக்கு உறுதியான விடை கிடைக்கவில்லை. சித்ரா ராமகிருஷ்ணாவின் கைதுக்குப் பின்னர் முழு உண்மையும் வெளிவரும் என நம்பலாம்!

x