முன்பு கோவிட், இப்போது உக்ரைன் போர்... இரண்டையும் வெற்றிகரமாக எதிர்கொண்டோம்!


பிரதமர் மோடி

போரால் நிலைகுலைந்திருக்கும் உக்ரைனிலிருந்து இந்திய மாணவர்களை மீட்க ‘ஆபரேஷன் கங்கா’ நடவடிக்கையை வெளியுறவுத் துறை அமைச்சகம் எடுத்துவருகிறது. இதுவரை 13,700 பேர் உக்ரைனின் அண்டை நாடுகளிலிருந்து மீட்டுவரப்பட்டிருக்கின்றனர். எனினும், இந்தியர்கள் மீட்கப்படும் நடவடிக்கைகளில் குறைபாடுகள் இருப்பதாக உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்கள், எதிர்க்கட்சிகள் எனப் பல்வேறு தரப்பினர் விமர்சித்துவருகின்றனர்.

இந்நிலையில், “கோவிட் பெருந்தொற்றை நாம் வெற்றிகரமாக எதிர்கொண்டோம். இப்போது உக்ரைனில் நிலவும் சூழலையும் வெற்றிகரமாக எதிர்கொண்டிருக்கிறோம். நமது மக்களைப் பத்திரமாக வெளியேற்றியிருக்கிறோம். இதைச் செய்வதில் பெரிய நாடுகளே கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர். ஆனால், இந்தியாவின் மீண்டுவரும் ஆற்றல் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்” என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

இன்று நடந்த புணே சிம்பியாசிஸ் பல்கலைக்கழகத்தின் பொன்விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, “இந்தியாவின் வளர்ந்துவரும் செல்வாக்கு உக்ரைன் போர்க்களத்திலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்களைத் தாய்நாட்டுக்குக் கொண்டுவந்திருக்கிறது” என்று பெருமிதத்துடன் கூறினார்.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்

எனினும், போர்ச் சூழலுக்கு நடுவே கடும் குளிரில், போதிய உணவு, குடிநீர் வசதியின்றி உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு நடந்தே செல்லும் மாணவர்கள் அங்கிருந்தே விமானம் மூலம் இந்தியாவுக்குக் கொண்டுவரப்படுகிறார்கள் என்பதை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.

உக்ரைனிலிருந்து பல மைல் தூரம் நடந்து அண்டை நாடுகளுக்கு மாணவர்கள் செல்வது, 2020 மார்ச் மாதம் கரோனா பொதுமுடக்கத்தை மோடி அரசு முன்னேற்பாடுகள் இல்லாமல் அறிவித்ததால், ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பியதை நினைவுபடுத்துவதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.

அத்துடன், மாணவர்களை மீட்கும் நடவடிக்கையை உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பயன்படுத்திக்கொள்வதாகவும் விமர்சிக்கப்படுகிறது. இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் கவனம் செலுத்துவதைவிட இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில் பிரதமர் கவனம் செலுத்துவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் விமர்சித்திருக்கிறார்.

பாஜகவின் முன்னாள் கூட்டணிக் கட்சியான சிவசேனாவும் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துவருகிறது. அக்கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழான ‘சாம்னா’வின் தலையங்கத்தில், “ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் போர் மேகங்கள் சூழ்ந்திருந்த நிலையில் பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் நமது மாணவர்களை விரைவாக மீட்கும் நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, தேர்தல் நடக்கும் உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர் மாநிலங்களில் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்” என்று விமர்சிக்கப்பட்டிருந்தது.

இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் கங்கா’ எனப் பெயர் வைத்ததே உத்தர பிரதேசத் தேர்தலை மனதில் கொண்டுதான் என்றும் ‘சாம்னா’ விமர்சித்திருந்தது.

உள் துறை அமித் ஷா

‘தேர்தலில் எதிரொலிக்கும்!’

“13,000 இந்தியர்கள் உக்ரைனிலிருந்து நாடு திரும்பியிருக்கிறார்கள். மேலும் விமானங்கள் அங்கிருந்து வருகின்றன. இந்த நடவடிக்கை, தேர்தல்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது” என நேற்று டெல்லியில் செய்தியாளர் சந்திப்பின்போது உள் துறை அமைச்சர் அமித் ஷா கூறியது குறிப்பிடத்தக்கது.

உத்தர பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் என்றும், பஞ்சாபில் கணிசமான வெற்றியைப் பெறும் என்றும் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின் இறுதிகட்ட வாக்குப்பதிவு நாளை (மார்ச் 7) நடைபெறுகிறது. பிற மாநிலங்களில் வாக்குப்பதிவு ஏற்கெனவே முடிந்துவிட்டது. மார்ச் 10-ல் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

x