ராமாயணத்தை மாற்றி அரங்கேற்றிய மாணவர்களுக்கு ரூ.1.2 லட்சம் அபராதம்: மும்பை ஐஐடி நடவடிக்கை


ராஹோவன் நாடகத்தில் ஒரு காட்சி

மும்பை: வருடாந்திர ஆண்டு கலை விழாவில் ‘ராஹோவன்’ என்ற பெயரில் நாடகம் நடத்திய மாணவர்களுக்கு தலா ரூ.1.2 லட்சம் அபராதம் விதித்துள்ளது மும்பை இந்தியன் தொழில்நுட்ப நிறுவனம் (மும்பை ஐஐடி). இந்திய புராணமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த நாடகம், இந்திய கலாச்சாரத்தை அவமதித்து விட்டதாக விமர்சிக்கப்பட்டு சமூக வலைதளத்தில் எதிர்மறையான கருத்துகளைப் பெற்றது.

இதனிடையே, இந்த உயர் கல்வி நிறுவனத்தின் செமஸ்டர் கட்டணங்களுக்கு நிகரான இந்த அபராதத்துடன், மாணவர்கள் பட்டம் பெறும்போது அவர்களுக்கு ஜிம்கானா விருதுகளில் எந்த அங்கீகாரமும் வழங்கப்படாது போன்றவையும் ஒழுங்கு நடவடிக்கையில் அடக்கம். அத்துடன் இந்நாடகத்தில் பங்கேற்ற ஜூனியர் மாணவர்களுக்கு ரூ.40,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுதிகளில் வசதிகளுக்கு தடைவிதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராஹோவனின் முக்கிய கதாபாத்திரங்கள் மோசமாக சித்தரிக்கப்பட்டதாகவும், அந்த நாடகம் இந்து மதம் மற்றும் கலாச்சார நம்பிக்கைகளை கேலிக்கு உள்ளாக்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதுகுறித்து விசாரணை நடத்த ஐஐடி நிறுவனம் ஒழுங்கு நடவடிக்கை குழுவினை அமைத்தது. அதன் கூட்டத்தின்போது நாடகத்தில் பங்கேற்ற மாணவர்களும் கலந்து கொண்டனர்.

நீண்ட விவாதத்துக்கு பின்னர், ஒழுங்கு நடவடிக்கைக் குழு மாணவர்களுக்கு அபராதம் விதித்து ஒழுங்கு நடவடிக்கையையும் எடுத்துள்ளது. இந்த நாடகம் ஒரு பழங்குடி சமூகத்தின் பெண்ணியவாதியை எடுத்துக்காட்டியது என்றும், அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று மாணவர்களுக்கு ஆதரவானவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே மாணவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை குறித்து கருத்து தெரிவிக்க மும்பை ஐஐடி மறுத்துவிட்டது.

முன்னதாகம் கடந்த ஏப்ரலில் மத்திய பல்கலைக்கழகமான புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ராமாயணத்தை அவமதித்து விட்டதாகவும், ராமன் கேலி செய்யப்பட்டதாகவும் கூறி, இந்திய ஹேக்கர்கள் சில பல்கலைக்கழகத்தின் இணையதளத்தை ஹேக் செய்ததாக கூறப்படுகிறது. பல்கலைக்கழக இணையதளத்தின் சேவையை தடைசெய்து விட்டதாக கூறிய ஹேக்கர்கள், பல்கலை.யின் பக்கத்தினை பிரபல இணையத் தகவல்களஞ்சியமான விக்கிப்பிடியாவில் இருந்து நீக்கப்போவதாக தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

x