மகளிருக்கு தனிக் கழிப்பறை: மதுரை எம்பி கடிதத்துக்கு எஸ்பிஐ தீர்வு


மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்த நிலையில், மகளிருக்கு எல்லா அலுவலகங்களிலும் தனிக் கழிப்பறைகள் அமைக்கப்படும் என்று ஸ்டேட் வங்கி வட்டார அலுவலகங்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜனவரி 25, 2022 அன்று நான் எஸ்பிஐ சேர்மனுக்கு மகளிர் ஊழியர்களுக்கு எல்லா ஸ்டேட் வங்கி அலுவலகங்களிலும் தனிக் கழிப்பறை உறுதி செய்யப்பட வேண்டும் என கடிதம் எழுதி இருந்தேன். அதற்கு ஸ்டேட் வங்கி மைய அலுவலகத்தில் இருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது. ஸ்டேட் வங்கியின் மனித உறவுகள் மற்றும் நிறுவன மேம்பாட்டு துணை மேலாண்மை இயக்குநர் ஓம் பிரகாஷ் மிஸ்ரா எனக்கு எழுதியுள்ள கடிதத்தில், '2018லேயே மகளிர் தனிக் கழிப்பறை அமைத்திட வலியுறுத்தி சுற்றறிக்கை விடுத்துள்ளோம். எனினும் உங்களின் கடிதம் கிடைத்தவுடன் எங்கள் எல்லா வட்டார அலுவலகங்களுக்கும் மகளிர் கழிப்பறைகளை எல்லா கிளைகள், அலுவலகங்களிலும் உறுதி செய்திட வேண்டுமென மீண்டும் அறிவுறுத்தல்களைத் தந்துள்ளோம்.

தற்போது தனிக் கழிப்பறை மகளிருக்கு இல்லாத அலுவலகங்களில் உடனே அமைத்திட கட்டிட உரிமையாளர்கள் இடம் பேசுமாறும், கட்டிட உரிமையாளர்கள் இயலாதென கூறினால் மாற்று ஏற்பாடுகளை செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளோம். இப்பிரச்சினையை எனது கவனத்திற்கு இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் (BEFI) மற்றும் அதன் மகளிர் துணைக் குழு கொண்டு வந்திருந்தது.

ஸ்டேட் வங்கி மைய அலுவலக வழிகாட்டல் உடனடியாக வட்டார அலுவலகங்களால் அமலாக்கப்படும் என நம்புகிறேன். பாலின நிகர் நிலை, பெண்களின் பிரத்தியேக கோரிக்கைகளில் ஒரு நேர் மறை நகர்வு இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டேட் வங்கியின் பதிலுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

x