‘கல்வி அவசரநிலை’ - யுஜிசி நெட் தேர்வு ரத்தும், மத்திய அரசு மீதான எதிர்க்கட்சிகள் சாடலும்


புதுடெல்லி: ‘யுஜிசி நெட் -2024’ தேர்வில் முறைகேடு நடந்து இருப்பதாக தேசிய சைபர் குற்றப் பிரிவிலிருந்து வந்த தகவலை அடுத்து அத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் புதன்கிழமை இரவு தெரிவித்தது. இந்நிலையில் இது குறித்து தேர்வின் நேர்மை சமரசம் செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறி எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளன.

தேசிய அளவில் இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சிக்காக நிதியுதவி பெறுவதற்கான தகுதியைத் தீர்மானிக்க தேசிய தேர்வு முகமையால் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) ‘யுஜிசி - நெட்’ தேர்வு நடத்தப்பட்டது. இந்தநிலையில் அத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக புதன்கிழமை இரவு மத்திய அரசு அறிவித்தது. இது அத்தேர்வினை எழுதிய தேர்வர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. யுஜிசி நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளன.

கார்கே: நெட் தேர்வு ரத்து குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பரிக்‌ஷா பே சார்ச்சா என்ற பெயரில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி நிறைய கலந்துரையாடி வருகிறார். எப்போது அவர் ‘நீட் பே சார்ச்சா’ குறித்து பேசுவார்? யுஜிசி நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது லட்ச கணக்கான மாணவர்களுக்கு கிடைத்த வெற்றி. இது மோடி அரசின் தோல்வியை சுட்டுகிறது.

நீட் வினாத்தாள் எங்கும் கசியவில்லை என மத்திய கல்வி அமைச்சர் முதலில் தெரிவித்தார். ஆனால், அது தொடர்பாக குஜராத், பிஹார் மற்றும் ஹரியாணாவில் சிலர் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு அது குறித்து அவர் ஒப்புக்கொண்டார். எப்போது நீட் தேர்வை ரத்து செய்வீர்கள்" என கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரியங்கா காந்தி: "பாஜக அரசின் மெத்தனப் போக்கு இளைஞர்களை வஞ்சிக்கிறது. முதலில் நீட் தேர்வில் முறைகேடு நடந்து இருப்பதாக சொல்லப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற நெட் தேர்வு தற்போது முறைகேடு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான பொறுப்பினை மத்திய கல்வி அமைச்சர் ஏற்பாரா?" என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மத்திய அரசை சாடியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி எம்.பி கார்த்தி சிதம்பரம், "நீட்ட தேர்வையும் ரத்து செய்க. அது நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டது" என ட்வீட் செய்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி: பாஜக ஆட்சியில் நடத்தப்படும் தேர்வில் முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு போன்றவை நடந்த வண்ணம் உள்ளன. இந்த அரசு நாட்டின் எதிர்காலத்துக்கு கேடு விளைவித்து வருகிறது. அதன் மூலம் மாணவர்களை விரக்தியில் ஆழ்த்தி வருகிறது என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

அகிலேஷ் யாதவ்: சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளன என்ற செய்தியினைத் தொடர்ந்து தற்போது யுஜிசி- நெட் தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாஜக ஆட்சியின் கீழ் தேர்வுத் தாள் கசிவு மாஃபியாக்கள் ஒவ்வொரு தேர்விலும் ஒன்றன் பின் ஒன்றாக மோசடி செய்து வருகின்றனர். இது நாட்டுக்கு எதிராக யாரே ஒருவர் செய்யும் மிகப் பெரிய சதியாக இருக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.

சிவ சேனா (உத்தவ் அணி): தேசிய தேர்வுகளை நடத்துவதில் மீண்டும் மீண்டும் ஏற்படும் முழுமையான தோல்வி என்டிஏ-வின் இயலாமையை அம்பலப்படுத்துகிறது என்று சிவ சேனா (உத்தவ் தாக்கரே அணி) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர், "இது ஒரு கல்வி அவசரநிலை, இந்தத் தேர்வுகளுக்காக விடாமுயற்சியுடன் தயாராகும் லட்சக்கணக்கானவர்களை இது பாதிக்கிறது. அவர்களின் மன அழுத்தத்தினை அப்படியே கடந்து சென்று விட முடியாது. தேர்வினை ரத்து செய்வது தீர்வு இல்லை. மத்திய அரசும் என்டிஏவும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

என்டிஏ - வை தடை செய்க: காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கம், என்டிஏ-க்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. அது வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்தக் குற்றச்சாட்டுகள் மற்றும் தேர்வு ரத்து நடவடிக்கைகள் அனைத்தும், என்டிஏ-ஆல் நடத்தப்படும் தேர்வுகளின் பாதுகாப்பு மற்றும் நேர்மை பற்றிய தீவிரமான கவலைகளை மீண்டுமொரு முறை சுட்டிக்காட்டுகின்றன" என்று தெரிவித்துள்ளது.

x