கரோனாவால் உயிரிழந்தவர்களில் 92 சதவீதத்தினர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள்!


2022-ல் கரோனா பாதிப்பால் மரணமடைந்தவர்களில் 92 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் பொது இயக்குநர் பல்ராம் பார்கவா கூறியிருக்கிறார்.

கரோனா பாதிப்புகள் தொடர்பாக நேற்று, மத்திய சுகாதாரத் துறையின் சார்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ஏராளமானோரின் உயிரைப் பாதுகாப்பதில் தடுப்பூசிகள் மிக முக்கியப் பங்கு வகித்திருப்பதாகக் கூறினார்.

உக்ரைனிலிருந்து திரும்புபவர்களுக்குத் தடுப்பூசி

மத்திய சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளரும், துணைச் செயலருமான லவ் அகர்வால் பேசுகையில், உக்ரைனிலிருந்து இந்தியா திரும்பும் மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களுக்கு அனைத்துவிதமான மருத்துவ உதவிகளும் செய்யப்படும் என்று குறிப்பிட்டார்.

இதுகுறித்து மேலும் பேசிய பல்ராம் பார்கவா, “உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மாணவர்களில், இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் உடனடியாகத் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

இந்தியா தடுப்பூசியால் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்றும், கரோனா பரவல் குறைவாக இருப்பதாலேயே பள்ளிகளையும் தொழில் நிறுவனங்களையும் நடத்த முடிகிறது என நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் கூறினார்.

கரோனா பரவலைப் பொறுத்தவரை, பிற நாடுகளுடன் ஒப்பிட இந்தியா நல்ல நிலைமையில் இருப்பதாக சுகாதாரத் துறை கூறியிருக்கிறது. உலக அளவில் கரோனா தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்துவருவதாகக் கூறிய லவ் அகர்வால், தொற்று குறைந்துவருவதில் உலக அளவிலான சராசரி 55.7 சதவீதம் என்றும், இந்தியாவில் அது 96.4 சதவீதம் என்றும் குறிப்பிட்டார்.

ஒரே ஒரு மாநிலத்தில் மட்டும்தான் 10,000-க்கும் அதிகமான தொற்றுகள் இருக்கின்றன. இரண்டு மாநிலங்களில் 5,000 முதல் 10,000 வரையிலான தொற்றுகள் இருக்கின்றன என்றும் அவர் கூறினார். இந்தியாவின் கரோனா தொற்றுகளின் எண்ணிக்கையில் 50 சதவீதம் கேரளா, மகாரஷ்டிரம், மிசோரம் ஆகிய மூன்று மாநிலங்களில் கண்டறியப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

x