ரஷ்யத் தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர் நவீன்: உக்ரைன், ரஷ்யத் தூதர்களுக்கு இந்தியா சம்மன்!


நவீன் குமார்

உக்ரைனில் ரஷ்யப் படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட இந்திய மாணவர் நவீன் குமார் (21), கர்நாடகத்தைச் சேர்ந்தவர். கார்கிவ் தேசிய மருத்துவப் பல்கலைக்கழகத்தில் 4-வது ஆண்டு மருத்துவப் படிப்பு பயின்று வந்த அவர், இன்று கார்கிவ் நகரில் ரஷ்யப் படைகள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் உயிரிழந்தார்.

ருமேனியா, போலந்து எல்லைகள் மூலம் உக்ரைனிலிருந்து இந்திய மாணவர்கள் தப்பிச் செல்ல முடியவில்லை. அங்கு காவல் பணியில் இருக்கும் உக்ரைன் காவலர்கள் நமது மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துவதால், பலர் தாங்கள் தங்கியிருந்த இடங்களுக்கே திரும்பியதாகச் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், கார்கிவ் நகரில் ரஷ்யப் படைகள் நடத்திய இடைவிடாத தாக்குதலில் நவீன் குமார் கொல்லப்பட்டிருக்கிறார்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அவரது குடும்பத்துடன் தொடர்பில் இருக்கிறது. அதேவேளையில், போர்ச் சூழலுக்கு நடுவில் அவரது உடலை இந்தியாவுக்குக் கொண்டுவருவது பெரும் சவாலான காரியமாக இருக்கும் எனச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

நவீன் குமார் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, உக்ரைனில் இருக்கும் இந்திய மாணவர்கள் மிகுந்த அச்சமடைந்திருக்கின்றனர்.

நவீன் குமார் மரணத்தைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள உக்ரைன் மற்றும் ரஷ்ய நாட்டு தூதர்களுக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.

இதற்கிடையே, உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்பது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மான்சுக் மாண்ட்வியா, “வெளியுறவுத் துறை அமைச்சகம் மேற்கொண்டிருக்கும் ‘ஆபரேஷன் கங்கா’ நடவடிக்கையின் மூலம், உக்ரைனில் இருக்கும் அனைத்து இந்தியர்களும் மீட்கப்படுவார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மத்திய சட்டத் துறை கிரண் ரிஜிஜு கூறுகையில், “உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க, அந்நாட்டு அரசின் ஒத்துழைப்பும் அவசியம் ஆகும். அந்நாட்டு அதிகாரிகளுடன் பேசுவதன் மூலம் மீட்பு நடவடிக்கைகளை முழுமையாக எடுக்க முடியும் என்பதற்காகவே அமைச்சர்களைக் கொண்ட குழுவைப் பிரதமர் மோடி அனுப்புகிறார்” எனக் கூறியிருக்கிறார்.

மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் புரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜு, வி.கே.சிங் அடங்கிய குழு உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க அனுப்பப்படுகிறார்கள். அவர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளிலிருந்தபடி மீட்புப் பணிகளில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கிரண் ரிஜிஜு ஸ்லோவாகியா நாட்டுக்கும், ஹர்தீப் புரி ஹங்கேரிக்கும் செல்கிறார்கள். ஜோதிராதித்ய சிந்தியா ருமேனியா, மால்டோவா நாடுகளின் வழியே இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபடுவார். போலந்து வழியாக இந்தியர்களை மீட்கும் பணியில் வி.கே.சிங் ஈடுபடுவார்.

x