உக்ரைனிலிருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு: உதவிக்கு வரும் விமானப் படை!


உக்ரைனில் போர் உச்சமடைந்திருக்கும் நிலையில், மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் அனைவரும் இன்றே அந்நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியிருக்கிறது. இதையடுத்து, கிடைக்கும் ரயில்கள் மூலம் வெளியேற வேண்டிய கட்டாயம் இந்தியர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

உக்ரைன் மீதான போரை ரஷ்யா நாளுக்கு நாள் தீவிரப்படுத்திவரும் நிலையில் ஜெர்மனி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாகப் படைகளை அனுப்பத் தீர்மானித்திருக்கின்றன.

350-க்கும் மேற்பட்ட உக்ரைனியர்களைப் பலிவாங்கியிருக்கும் இந்தப் போரின் அடுத்த நகர்வாக, 40 மைல் நீளத்துக்கு ராணுவ டாங்குகள் அடங்கிய அணிவகுப்பை உக்ரைன் தலைநகர் கீவின் வடக்குப் பகுதியில் ரஷ்யா நடத்தியிருக்கிறது. இந்தக் காட்சி அமெரிக்காவைச் சேர்ந்த மக்ஸார் டெக்னாலஜி எனும் தனியார் நிறுவனத்தின் செயற்கைக்கோள் புகைப்படமாக வெளியாகியிருக்கிறது. இதையடுத்து, உக்ரைனில் பதற்றம் மேலும் அதிகரித்திருக்கிறது.

உக்ரைனில் சிக்கிக்கொண்டிருக்கும் மருத்துவ மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள், அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றனர். போலந்து, ருமேனியா போன்ற நாடுகளின் வழியே தப்பிச் செல்ல எல்லையை அடையும் இந்திய மாணவர்கள் மீது உக்ரைன் காவலர்கள் தாக்குதல் நடத்துவது நிலைமையைச் சிக்கலாக்கியிருக்கிறது.

இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் கங்கா’ எனும் பெயரில் வெளியுறவுத் துறை அமைச்சகம் எடுத்துவரும் நடவடிக்கைகளும் தீவிரமடைந்திருக்கின்றன. இதன் பணிகளை ஆய்வுசெய்த பிரதமர் மோடி, நான்கு அமைச்சர்களைத் தனது சிறப்புத் தூதர்களாக நியமித்து மீட்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு பணித்திருக்கிறார்.

இந்நிலையில், இந்திய விமானப் படையின் சி-17 ரக விமானங்களை உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அனுப்ப முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, இந்தியர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

x