இந்தியாவில் சுதந்திர தினத்தன்று 5ஜி சேவை தொடங்கும்!


2022 ஆகஸ்ட்15 முதல், இந்தியாவில் 5-ம் தலைமுறை அதிவேக இணைய சேவை நடமுறைக்கு வர இருக்கிறது.

இணைய வேகத்தில் புதிய தலைமுறை தொழில்நுட்பம் அமலுக்கு வரும்போதெல்லாம், நாட்டின் பல்வேறு தளங்களின் வளர்ச்சியும் பாய்ச்சல் எடுக்கும். தற்போது பயன்பாட்டில் இருக்கும் 4ஜி தொழில்நுட்பம், கடந்த ஐந்தாண்டுகளாக இந்தியாவில் புழக்கத்தில் உள்ளது. முந்தைய தலைமுறை தொழில்நுட்பத்தைவிட இவை ஏற்படுத்திய மாற்றங்கள் அதிகம். கல்வி, வேலைவாய்ப்பு, பொழுதுபோக்கு என பல அடுக்குகளில் இவை புரட்சிகரமான மாற்றங்களுக்கு வித்திட்டிருக்கின்றன.

இந்த வரிசையில் உலகின் வளர்ந்த நாடுகளில் 5ஜி நுட்பம் அறிமுகமானதை அடுத்து, இந்தியாவிலும் அவற்றை கொண்டுவர முடிவானது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் சூழலில், ஆக.15 சுதந்திர தினத்தன்று 5ஜி முதல்கட்ட சேவையை அமல்படுத்துமாறு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நாட்டின் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வருடம் என்பதால், அதன் வளர்ச்சியை பறைசாற்றும் வகையில் பல முன்னோடி திட்டங்கள் இந்த வருடம் பெரும்முனைப்போடு அறிமுகமாகின்றன. அவற்றில் அதிகவேக இணைய வசதிக்கான 5ஜி நுட்பமும் அடங்கும்.

தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களும் 5ஜி தொழில்நுட்பத்துக்கு தயாராகி வருகின்றன. ஏல நடைமுறைகள் முடிவடைந்த பின்னரே, புதிய அலைக்கற்றை புரட்சி நாட்டில் சாத்தியமாகும். புதிய தொழில்நுட்பத்துக்கான செலவினங்கள் அதிகம் என்பதால், அந்த சுமையை வாடிக்கையாளர் வசம் தள்ளிவிட தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் முயலும். இதனால் கட்டண விகிதங்கள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால், தற்போதுள்ள இணைய வேகத்தைவிட பல மடங்கு அதிகமான வேகமும் இதர பயன்பாடுகளும் கூடிய 5ஜி தொழில் நுட்பத்தை வரவேற்க வாடிக்கையாளர்களும், தொழில்நிறுவனங்களும் ஆயத்தமாகி வருகின்றனர்.

x