மணிப்பூர் தேர்தல் பிரச்சாரம்: ஆஃப்ஸ்பா குறித்து அமைதி காத்த அமித் ஷா!


மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி நெருங்கிவரும் நிலையில், அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் உச்சகட்டத்தை அடைந்திருக்கின்றன. அம்மாநிலத்தின் சுராசாந்த்பூர் மாவட்டத்தில் நேற்று பிரச்சாரக் கூட்டத்தில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு பேசினார். அப்போது அசாமில் போடோ கிளர்ச்சியாளர்களின் பிரச்சினை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, போடோ இளைஞர்கள் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியதைப் போல, தனி மாநிலம் கேட்டுப் போராடிவரும் குகி பழங்குடியின இளைஞர்களும் ஆயுதங்களைக் கைவிட வழிவகுக்கப்படும் என உறுதியளித்தார். தனி மாநிலக் கோரிக்கை தொடர்பாக விரைவில் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். எனினும், ராணுவத்தினருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை (ஆஃப்ஸ்பா) மணிப்பூர் மாநிலத்திலிருந்து நீக்குவது குறித்து அவர் எதையும் பேசவில்லை.

60 இடங்களைக் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தல், பிப்ரவரி 28 மார்ச் 5 என இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில், விலைவாசி உயர்வு, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. எல்லாவற்றையும் தாண்டி முக்கியப் பேசுபொருளாக இருப்பது ஆஃப்ஸ்பா சட்டம்தான். நாகாலாந்தில் ராணுவத்தினரால் பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, ஆஃப்ஸ்பா சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் எனும் கோரிக்கை வட கிழக்கு மாநிலங்களில் வலுத்துவருகிறது.

மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில், தேசிய மக்கள் கட்சி (என்பிபி) கட்சியின் முக்கிய வாக்குறுதியாக அந்தக் கோரிக்கை இருக்கும் என அக்கட்சியின் தலைவரும் மேகாலயா முதல்வருமான கான்ராட் சங்மா கூறியிருந்தார். மேகாலயாவை மையமாகக் கொண்ட தேசிய மக்கள் கட்சி, மணிப்பூரில் பாஜகவின் கூட்டணி அரசிலும் இடம்பெற்றிருக்கிறது. எனினும், இந்தத் தேர்தலில் அக்கட்சி தனித்தே போட்டியிடுகிறது.

ஆச்சரியப்படும் விதமாக, இந்த முறை காங்கிரஸ் கட்சியும் இந்தக் கோரிக்கையை முன்னெடுத்திருக்கிறது. 2017-ல் பாஜக மணிப்பூரில் ஆட்சியைப் பிடிக்கும் முன்பு பல ஆண்டுகள் அம்மாநிலத்தை ஆண்டுவந்த காங்கிரஸ் கட்சி, இதற்கு முன்பு ஆஃப்ஸ்பா சட்டத்தை நீக்குவது குறித்து பேசியதில்லை.

எனினும், இவ்விஷயத்தில் பாஜக மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறது. எல்லைப் பாதுகாப்பு எனும் பதத்தையே அக்கட்சி பிரதானமாக முன்வைக்கிறது. குகி தேசிய அமைப்பு (கேஎன்ஓ) மற்றும் ஐக்கிய மக்கள் முன்னணி (யூபிஎஃப்) போன்ற அமைப்புகள், குகி பழங்குடியினருக்கான தனி மாநிலம் கேட்டுப் போராடிவருகின்றன. அந்த அமைப்புகளின் இயக்கத்தை நிறுத்திவைப்பது தொடர்பாக மத்திய அரசு ஏற்கெனவே ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது.

நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஆஃப்ஸ்பா தவிர மற்ற பிரச்சினைகள் குறித்தே அமித் ஷா அதிகம் பேசினார். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கிளர்ச்சி, ஆயுதக் கடத்தல், போதைப்பொருள் கடத்தல், ஊழல் போன்ற பிரச்சினைகள் இருந்ததாகக் குற்றம்சாட்டிய அமித் ஷா, பாஜக முதல்வர் பீரேன் சிங்கின் ஆட்சியில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மணிப்பூரில் போராட்டங்களோ, கடையடைப்போ நடைபெறவில்லை என்றும், அமைதி மற்றும் வளர்ச்சிப் பாதையில் மணிப்பூரை பாஜக அரசு கொண்டுசெல்கிறது என்றும் பெருமிதம் தெரிவித்தார். பாஜக ஆட்சியில் தகவல் தொடர்பு, தொழில்நுட்பம், விளையாட்டு, தொழில் துறை போன்ற துறைகளில் மணிப்பூர் வளர்ச்சி கண்டிருப்பதாகவும் கூறினார். இரண்டாவது முறையாக பாஜகவை வெற்றிபெற வைத்தால் வளர்ச்சிப் பணிகள் தொடரும் என்றும் அவர் உறுதியளித்தார்.

ஆஃப்ஸ்பா சட்டத்தை நீக்குவது குறித்து மாநில அரசுகள் பரிந்துரைத்தாலும் இது தொடர்பாக மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும். பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இதுதொடர்பான வாக்குறுதி இடம்பெறாததால், மணிப்பூரில் ஆஃப்ஸ்பா சட்டத்தை நீக்க மத்திய அரசு தயாராக இல்லை என்றே தெரிகிறது. நேற்றைய பிரச்சாரத்தில் அமித் ஷா அதைப் பற்றி பேசாதது அரசின் முடிவை உறுதிசெய்வதாகக் கருதப்படுகிறது.

x