‘நான் குடியரசுத் தலைவர் வேட்பாளரா?’ - மறுக்கும் நிதீஷ் குமார்


நிதீஷ் குமார்

பிஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமார் குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்னிறுத்தப்படலாம் எனப் பேச்சுகள் எழுந்திருக்கும் நிலையில், அதில் தனக்கு நாட்டமோ ஆர்வமோ தனக்கு இல்லை என அவர் மறுத்திருக்கிறார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் நிறைவுபெறுகிறது. இதையடுத்து, நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவர் யார் எனும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இதில் முதல் பெயராக நிதீஷ் குமாரின் பெயர் அடிபடுகிறது.

நவாப் மாலிக்

பாஜகவுடனான உறவைத் துண்டித்துக்கொண்டால் நிதீஷ் குமாரை அடுத்த குடியரசுத் தலைவர் வேட்பாளராகப் பரிசீலிக்கலாம் என மகாராஷ்டிர அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான நவாப் மாலிக் நேற்று முன்தினம் (பிப்.22) கூறியிருந்தார். பிற கட்சிகளின் தலைவர்கள் கலந்துபேசி இவ்விஷயத்தில் முடிவுசெய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், பாட்னாவில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த நிதீஷ் குமார், இதுதொடர்பான கேள்விகளுக்குப் பதில் அளித்தபோது, “எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இதுகுறித்து யாரும் என்னிடம் ஆலோசிக்கவில்லை” என்று குறிப்பிட்டார்.

பிரசாந்த் கிஷோர்

கடந்த வாரம் டெல்லியில் நிதீஷ் குமாரை, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசியது பல்வேறு ஊகங்களுக்கு வித்திட்டது. அப்போது குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக நிற்குமாறு நிதீஷ் குமாருக்குப் பிரசாந்த் கிஷோர் யோசனை தெரிவித்திருக்கலாம் எனத் தற்போது ஊகிக்கப்படுகிறது. எனினும், அரசியல் தொடர்பாக எதையும் பேசவில்லை என இருவரும் மறுப்பு தெரிவித்திருந்தனர். தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்ட தலைவர்களையும் பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசிவருகிறார். மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேயை சந்திரசேகர் ராவ் சந்தித்துப் பேசினார். இந்த நகர்வுகள், பாஜகவுக்கு எதிரான கட்சிகளை அணிதிரட்டும் முயற்சிகளாகக் கருதப்படுகின்றன. கூடவே, குடியரசுத் தலைவர் வேட்பாளராக எதிர்க்கட்சிகள் சார்பில் யாரை முன்னிறுத்துவது என ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் எனும் ஊகத்தையும் சமீபத்திய நகர்வுகள் எழுப்புகின்றன.

தேஜ் பிரதாப் யாதவ்

இதற்கிடையே, நவாப் மாலிக் தொடங்கிவைத்த இந்தப் பேச்சு பிஹார் மாநில அரசியல் வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அம்மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளத்திலேயே மாறுபட்ட குரல்கள் ஒலிக்கின்றன. “கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் குடியரசுத் தலைவராவதா?” என லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் கேள்வி எழுப்பியிருக்கிறார். 30 வருடங்களுக்கு முன்பு ஒரு கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த நிதீஷ் குமார், உச்ச நீதிமன்றத்தால் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டவர். இதுகுறித்து ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

ஆனால், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர்களான மிருத்யுஞ்சாய் திவாரி, சக்தி யாதவ் ஆகியோர், பிஹாரிலிருந்து ஒரு தலைவர் குடியரசுத் தலைவரானால் அது பெருமைக்குரிய விஷயம்தான் எனக் கூறியிருக்கிறார்கள்.

பாஜகவுடனான உறவைத் துண்டித்தால்தான் ஆதரவு என்று நவாப் மாலிக் கூறியது, பாஜகவுக்கும் நிதீஷ் குமாருக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தும் முயற்சியா என்றும் கேள்விகள் எழுந்தன. ஆனால், அதெல்லாம் இல்லவே இல்லை என்று நிதீஷ் மறுத்துவிட்டார். சாதிவாரிக் கணக்கெடுப்பு உட்பட பல்வேறு விஷயங்களில் பாஜகவுடன் கருத்து வேறுபாடு இருந்தாலும், நிதீஷ் குமார் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அத்தனை எளிதில் வெளிவர மாட்டார் என்றே கருதப்படுகிறது.

இவ்விஷயத்தில் பாஜக வெளிப்படையாக இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக சார்பில் ஒருவர் முன்னிறுத்தப்பட்டாலும், அதற்குப் பிற கட்சிகளின் ஆதரவும் கிடைக்க வேண்டும். மக்களவையில் ராட்சத பலத்துடன் இருக்கும் பாஜகவுக்கு, மாநிலங்களவையில் போதுமான பலம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

x