அமெரிக்க ஆயுதங்களுடன் எல்லை அருகே பயங்கரவாதிகள்: என்ன செய்யப்போகிறது இந்தியா?


இந்தியாவின் கட்டுப்பாட்டு எல்லைக் கோடு (எல்ஓசி) அருகில் நவீன ஆயுதங்கள் – இரவிலும் தெளிவாகப் பார்க்க உதவும் சாதனங்களுடன் நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் இப்போது ஊடுருவத் தயாராகி வருகிறார்கள். ஆப்கானிஸ்தானில் விற்கப்பட்ட செல்போன் சிம்களை அவர்கள் பயன்படுத்துகின்றனர். இந்த ஆயுதங்கள், சாதனங்கள் அனைத்தும் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் பயன்படுத்தியவை. கெடு நேரம் நெருங்கிவிட்டதால் துருப்புகளை மட்டும் சேதமில்லாமல் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆயிரக்கணக்கான கவச வாகனங்கள், இயந்திரத் துப்பாக்கிகள், இரவில் பார்க்க உதவும் கருவிகள், கண்ணி வெடிகள், டேங்குகள், விமான எதிர்ப்பு ஏவுகணைகள், ஜீப்புகள், பைக்குகள், சிறு விமானங்கள், ஹெலிகாப்டர்கள் போன்றவற்றை பன்னாட்டுப் படையினர் விட்டுவிட்டு 2021 ஆகஸ்ட் மாத இறுதியில் காபூலைவிட்டு விமானங்களில் சென்றனர். தாலிபான்கள் அவற்றைக் கைப்பற்றி தங்களுடைய பயன்பாட்டுக்கு எடுத்துக்கொண்டனர்.

தாலிபான்களில் ஆப்கானிஸ்தானிய தாலிபான்கள், பாகிஸ்தானிய தாலிபான்கள் என்று இரு பிரிவினர் உள்ளனர். ஆப்கானிஸ்தான் தாலிபான்களுக்கு தார்மிக ஆதரவு தந்த பாகிஸ்தானிய தாலிபான்கள் இந்திய எதிர்ப்பு உணர்வு கொண்டவர்கள். அவர்கள் இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ராணுவம் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவுகிறது. இந்திய - பாகிஸ்தான ராணுவ எல்லைப்புற தளபதிகளுக்கிடையே நடந்த பேச்சு வார்த்தைக்குப் பிறகு பரஸ்பரம் எல்லைகள் மீது பீரங்கி அல்லது இயந்திரத் துப்பாக்கிகள் மூலம் சுடுவது நின்றது. அதற்குப் பிறகு கடந்த சில மாதங்களாக எல்லைப்புற மக்கள் இந்தியாவில் நிம்மதியாக இருக்கின்றனர். அவர்களும் காஷ்மீர் நிர்வாகமும், ராணுவமும் இதைப் பயன்படுத்திக்கொண்டு நிறுத்திவைக்கப்பட்டிருந்த சாலை அமைப்பு, மின்சார இணைப்பு, கட்டிட வேலைகள் ஆகியவற்றை மேற்கொண்டு வருகின்றனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியிலும் அந்நாட்டு ராணுவம் இதே போல பதுங்கு குழிகள், இந்திய எல்லை நோக்கி சுடுவதற்கான பீரங்கி தளங்கள், தகவல் தொடர்புக்கான வசதிகள், பாதுகாப்பு அரண்கள், பாலங்கள், சாலைகள் ஆகியவற்றை கட்டிக்கொண்டிருக்கிறது. இந்திய எல்லையிலிருக்கும் ராணுவம் தொலைநோக்கிகள் வழியாகவும் ஒற்று மூலமும் இவற்றைக கண்காணித்துக்கொண்டிருக்கிறது.

சமீபத்தில், எல்லைக்கு அருகில் இரவில் ஊடுருவ முயன்று இந்திய ராணுவ வீரர்களையும் எல்லைப் பாதுகாப்புப் படையினரையும் பார்த்ததும் பின்வாங்கி ஓடினர் சில பயங்கரவாதிகள். அவர்கள் விட்டுச் சென்ற ஆயுதங்களைக் கைப்பற்றி ஆராய்ந்தபோது அவை மிக நவீனமானதாக இருந்தன. அவற்றில் உள்ள அடையாளங்களையும் குறிகளையும் பார்க்கும்போதே அவை அமெரிக்காவின் சாதனங்கள் என்பது தெரிகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டு தாலிபான்கள் அதை இந்தியாவுக்குள் நுழைய விரும்பும் பயங்கரவாதிகளுக்குத் தந்திருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் பயங்கரவாதிகளில் பலர் செல் பேசிகளில் அடிக்கடி யாருடனோ பேசுகின்றனர். அப்படிப் பேசுவதற்கு உதவும் செல்போன் சிம்கள் ஆப்கானிஸ்தானில் விற்கப்படுபவை என்பதும் தெரிய வந்திருக்கிறது. இப்போதைக்கு 100 முதல் 130 பேர் ஆயுதங்களுடன் எல்லைக்கு அருகில் ஒரேயொரு பகுதியில் காத்திருக்கின்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பிற பகுதிகளில் காத்திருப்பார்கள் என்று தெரிகிறது.

கோடைக்காலம் தொடங்கிய பிறகு அவர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ திட்டமிட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக இந்திய ராணுவம் எடுத்த தொடர் நடவடிக்கைகளால் ஏற்கெனவே அங்கு தங்கியிருந்த ஊடுருவல்காரர்களும் பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர் அல்லது அங்கிருந்து விலகிவிட்டனர். இப்போது புதிய ஆட்கள் வந்திருக்கின்றனர்.

உலகம் முழுவதுமே இப்போது உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிக்குமோ, ஐரோப்பியக் கண்டத்தில் போர் மூளுமோ என்றெல்லாம் பதைபதைப்புடன் கவனித்துக் கொண்டிருப்பதைப் பயன்படுத்தி, இந்தியா மீது தாக்குதல் தொடுக்க அல்லது எல்லை கடந்து வந்து நாசவேலைகளைச் செய்ய பயங்கரவாதிகள் முனைப்போடு இருக்கின்றனர். ராணுவம் மூலம் தாக்கினால் இந்தியா பலமாகத் திருப்பித் தாக்குகிறது என்பதாலும் அதற்கு உலக நாடுகளிடையே ஆதரவு இருக்கிறது என்பதாலும் தங்களால் முடியாததை பயங்கரவாதிகள் மூலம் நிறைவேற்ற பாகிஸ்தானிய ராணுவத் தலைமை எண்ணுகிறது.

கெடு நாட்களுக்குள் அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுப் படைகள் காபூலை விட்டு வெளியேறாவிட்டால் அவர்கள் மீது தாக்குதல் நடந்த தாலிபான்கள் முடிவு செய்திருந்தனர். அவர்களுக்கு உதவி செய்ய பாகிஸ்தானிலிருந்து ஏராளமான தாலிபான்கள் சென்றிருந்தனர். அமெரிக்காவும் அவர்களுடைய நேச நாட்டினரும் சொன்னபடி சென்றுவிட்டதாலும் மேற்கொண்டு ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு ராணுவ ரீதியிலான வேலை இல்லாததாலும் பாகிஸ்தானிலிருந்து சென்றவர்களைத் திருப்பி அனுப்பினர். அப்படி அனுப்பப்பட்டவர்களில் சிலர் அமெரிக்க ராணுவம் வீட்டுச் சென்ற ஆயுதங்கள், இரவில் பார்க்க உதவும் கருவிகள் போன்றவற்றை கேட்டு வாங்கி வந்திருக்கின்றனர்.

பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்தும் அல்லது பாகிஸ்தானில் தயாராகும் ஆயுதங்களை இந்திய ராணுவத்துக்கு எதிராகப் பயன்படுத்தினால் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு தருவது மீண்டும் மீண்டும் ஆதாரத்துடன் நிரூபணமாகிறது என்பதால் அமெரிக்க ஆயுதங்களைத் தந்துள்ளனர். அத்துடன் அமெரிக்க ஆயுதங்கள் நவீனமானவை, அதிக சேதம் ஏற்படுத்தக் கூடியவை என்பதாலும் அளித்துள்ளனர். இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் சிலரை இந்திய ராணுவம் துப்பாக்கிச் சண்டையில் கொன்ற பிறகு அங்கே சென்று கள ஆய்வு நடத்தியபோது அவர்கள் விட்டுச் சென்ற ஆயுதங்களும் சாதனங்களும் அவை அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் விட்டுச் சென்றவை என்பது சந்தேகமறத் தெரிய வந்திருக்கிறது.

இந்தச் சவாலை எப்படிச் சமாளிக்கப் போகிறீர்கள் என்று இந்திய ராணுவ உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “ஆயுதங்கள் நவீனமாக இருந்தாலும் அதைப் பயன்படுத்துகிறவர்கள் பயங்கரவாதிகள் என்பதால் எங்களால் எதிர்கொள்ள முடியும்” என்றார்.

x