எகிறும் சர்வதேச கச்சா எண்ணெய் விலை: ஏறுமா பெட்ரோல், டீசல் விலை?


சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலர் என்ற விலை உச்சத்தைத் தொட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில்தான் இந்த உச்சத்தை எட்டியிருந்தது. தற்போது ஏற்பட்டுள்ள பல்வேறு அசாதாரண சூழலால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

விலை உயர்வின் பின்னணி

ரஷ்யா - உக்ரைன் இடையே உள்ள போர் பதற்றம்தான் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு முக்கியக் காரணம். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைனுக்கு தனது படைகளை அனுப்பியதால் மிகப் பெரிய அளவில் போர் பதற்றம் நிலவுகிறது. இதனால் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் நிச்சயமற்ற தன்மை நிலவி வருகிறது. ஏனெனில் உலகளவில் அதிக அளவு கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்யக்கூடிய நாடுகளில் ரஷ்யா இரண்டாவது இடத்தில் உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லக்கூடிய எண்ணெய் குழாய்கள் உக்ரைன் வழியாகவே செல்கின்றன.

ஏற்கெனவே ஒமைக்ரான் வைரஸால் சர்வதேச சந்தையில் நிச்சயமற்ற தன்மை நிலவி வந்தது. ஆனால், தற்போது அதனுடன் சேர்த்து ரஷ்யா போர் பதற்றம் கச்சா எண்ணெய் விலை உயர்வை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய பொருளாதாரத்தை பாதிக்குமா?

ரஷ்யாவிலிருந்து நாம் குறைந்த அளவே கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறோம். அதாவது 2021-ல், ஒரு நாளைக்கு 43,400 பேரலை மட்டுமே ரஷ்யாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்து வந்ததுள்ளது. அதாவது மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் இது ஒரு சதவீதம் மட்டுமே. இதேபோல, கடந்த ஆண்டு 1.8 மில்லியன் டன் நிலக்கரியை ரஷ்யாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இதுவும் மொத்த இறக்குமதியில் 1.3 சதவீதம் மட்டுமே.

ரஷ்யாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்வது குறைவாக இருந்தாலும் மறைமுகமாகக் கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியாவைப் பாதிக்க வாய்ப்புள்ளது. கச்சா எண்ணெய் விலை சார்ந்த பொருட்கள் மொத்த விலை விற்பனைக் குறியீட்டில் 9 சதவீதத்தைக் கொண்டுள்ளன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது இயல்பாகப் பணவீக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அதவாது, 10 சதவீதம் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால் 0.9 சதவீதம் மொத்தவிலை விற்பனை குறியீடு (WPI inflation) பணவீக்கம் அதிகரிக்கும். 2022-ம் நிதியாண்டில் மொத்தவிலை விற்பனை குறியீடு 11.5 முதல் 12 சதவீதம் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அதிகரித்துள்ள கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் மேலும் 1 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மேலும் நம்முடைய கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதம் இறக்குமதி மூலமாகவே பூர்த்தி செய்துவருகிறோம். சர்வதேச அளவில் ஏற்படும் விலை உயர்வு நேரடியாக நடப்பு கணக்குப் பற்றாக்குறையை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கருதுகிறார்கள். நடப்பு கணக்குப் பற்றாக்குறை என்பது சரக்கு மற்றும் சேவைகளின் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் உள்ள வித்தியாசம். அதுமட்டுமல்லாமல் 2022-ல் கச்சா எண்ணெய் இறக்குமதி கடந்த 2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை உள்ளதைவிட 25.8 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் செலவும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர்.

சாதாரண மக்களுக்கு பாதிப்பா?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேரடியாக சர்வதேச கச்சா எண்ணெய் விலையுடன் தொடர்பு உள்ளதால் கண்டிப்பாக விலை உயர வாய்ப்பு இருக்கிறது. ஏற்கெனவே இந்தியா முழுவதும் 2021-ல் வரலாறு காணாத அளவு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து 100 ரூபாய்க்கு மேல் விற்பனையானது. இதனால் மக்கள் மிகவும் பாதிப்புகுள்ளாகினர். சில மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வாட் வரியைக் குறைத்து மக்களுக்குச் சில சலுகைகளை வழங்கின.


பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வந்தன. ஆனால் கடந்த 110 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை. தலைநகர் டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு 95.30 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 84.70 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது. உத்தர பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்துவருவதால் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு விலை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார்கள்.

இதேபோன்று கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 5 டாலர் உயர்ந்த போதும் 2018-ல் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின்போது 19 நாட்கள் பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. தேர்தலுக்குப் பிறகு எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு 3.8 ரூபாய் வரை உயர்த்தின. இதேபோன்ற சூழல் தற்போது நடைபெற வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகிறார்கள். மொத்தத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தடுக்க முடியாது என்பது நிதர்சனமே.

x