மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் கைது: நிழலுலகத்துடன் தொடர்பா?


மகாராஷ்டிர சிறுபான்மை நலத் துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான நவாப் மாலிக், இன்று கைதுசெய்யப்பட்டிருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மும்பையின் நிழலுலக சாம்ராஜ்யத்துடன் தொடர்புடைய பணமோசடிப் புகார்கள் குறித்து அமலாக்கத் துறை சமீபகாலமாகத் தீவிர விசாரணை நடத்திவருகிறது. நிழலுகத்தைச் சேர்ந்த பலர் மீது வழக்குப் பதிவுசெய்துவருவதுடன், பல்வேறு இடங்களில் சோதனைகளும் நடத்தப்பட்டிருக்கின்றன. தாவூத் இப்ராஹிமின் சகோதரர் இக்பால் கஸ்கர் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டது இதன் ஒரு பகுதிதான். இந்நிலையில், தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகளுக்கும் நவாப் மாலிக்குக்கும் இடையே பணப் பரிவர்த்தனைகள் நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்ததாகக் கூறி நடவடிக்கையில் இறங்கியது அமலாக்கத் துறை.

முதலில், நவாப் மாலிக்கின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, பின்னர் தெற்கு மும்பையில் உள்ள தனது அலுவலகத்துக்கு அவரை அழைத்துச் சென்றது. அங்கு அவரிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், அவர் பல கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் நழுவியதாகவும், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் கூறி அவரைக் கைதுசெய்தனர்.

தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகளுடன் அவர் நடத்திய நில பேரங்கள் தொடர்பாக அவரிடம் கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

ஐந்தாவது முறையாக மகாராஷ்டிர சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கும் நவாப் மாலிக் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் நம்பிக்கையைப் பெற்றவர்.

தாவூத் இப்ராஹிம்

நவாப் மாலிக் கடந்த சில மாதங்களாக பாஜகவைக் கடுமையாக விமர்சித்துவந்தவர். 1993-ல் உத்தர பிரதேசத்தில் ஆட்சியில் இருந்தபோது, பாஜக மத அடிப்படையிலான வன்முறையைத் தூண்டியது என்றும், அதன் காரணமாகவே அக்கட்சியை மக்கள் நிராகரித்துவந்தனர் என்றும் கூறிய நவாப் மாலிக், இந்த முறை உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியடையும் என்று கூறிவந்தார்.

கைதுசெய்யப்பட்ட பின்னர் புன்னகை முகத்துடன் கையசைத்தபடி அமலாக்கத் துறை அலுவலகத்திலிருந்து வெளியே வந்த நவாப் மாலிக், வாகனத்தில் ஏற்றிச் செல்லப்படும்போது, “போராடி வெற்றி பெறுவோம். அஞ்சமாட்டோம்” எனக் கூறினார்.

நவாப் மாலிக் கைதுசெய்யப்பட்டது தொடர்பாகக் கருத்து தெரிவித்திருக்கும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், “விசாரிக்க அவர்களிடம் என்ன வழக்கு இருக்கிறது? அதனால்தான், தாவூத் இப்ராஹிமின் பெயரை அவர்கள் எடுத்திருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

மத்தியப் புலனாய்வு அமைப்பால் கடந்த 4 மாதங்களில் கைது செய்யப்படும் இரண்டாவது மகாராஷ்டிர அமைச்சராகிறார் நவாப். அம்மாநில உள் துறை அமைச்சராக இருந்த அனில் தேஷ்முக், சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த நவம்பர் மாதம் கைதுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்தான்.

சரத் பவார்

மகாராஷ்டிரத்தை ஆளும் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சி அதிர்ச்சியடைந்திருக்கிறது. இவ்விஷயத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க அவசரக் கூட்டத்துக்கும் சரத் பவார் ஏற்பாடு செய்திருக்கிறார். நவாப் மாலிக் கைதுசெய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனக் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.

x