பிஹாரில் பசு குண்டர்கள் மீண்டும் அட்டகாசம்: ஆளுங்கட்சி நிர்வாகி அடித்துக் கொலை!


பிஹாரின் சமஸ்திபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது கலீல் ஆலம். இவர் அம்மாநில ஆளுங்கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர். பிப்ரவரி 16-ல், அவர் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்திருந்தனர்.

பிப்ரவரி 19-ல் அவரது உடல் புடீ கண்டக் ஆற்றங்கரையில் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடல் பாதி எரிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்திருக்கிறது. இந்நிலையில் அவரிடம் ஒரு கும்பல் மாட்டிறைச்சி தொடர்பாக மிரட்டி கேள்வி கேட்கும் காணொலி நேற்று போலீஸாருக்குக் கிடைத்தது.

அதில் அவர் எங்கு இறைச்சிக்காகப் பசுக்களை அவர் வெட்டினார் எனக் கேள்வி எழுப்பும் ஒரு கும்பல், மாட்டிறைச்சி விற்பனையில் தொடர்புடையவர்களின் விவரங்களைத் தருமாறும் மிரட்டுகிறது. அவர் தன் வாழ்நாளில் எவ்வளவு மாட்டிறைச்சி உண்டிருக்கிறார் என்றும், தனது குழந்தைகளுக்கும் மாட்டிறைச்சி உண்ணக் கொடுத்தாரா என்றும் கேட்ட அந்த கும்பல் மதம் சார்ந்தும் அவரிடம் கேள்விகளைக் கேட்டிருக்கிறது. அவர் தன்னை விட்டுவிடுமாறு கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்கும் காட்சியும் பதிவாகியிருக்கிறது. அதேசமயம், குற்றவாளிகள் யாரும் அந்தக் காணொலியில் காட்டப்படவில்லை.

இந்தக் காணொலி சமூகவலைதளங்களில் பலத்த அதிர்வுகளைக் கிளப்பியிருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பான செய்தியையும் படங்களையும் ட்விட்டரில் வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் தேஜ்ஸ்வி யாதவ், பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாகக் காணாமல் போய்விட்டதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார். “ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த ஒரு தலைவரே தாக்கப்பட்டு, உயிருடன் கொளுத்தப்பட்டு, புதைக்கப்பட்டிருக்கிறார். இதுபோன்ற சம்பவங்கள் ஏன் இன்னமும் பிஹாரில் நடக்கின்றன என நிதீஷ் குமார் நமக்குச் சொல்ல வேண்டும். ஏன் சிலர் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்கின்றனர்?” என அந்த ட்வீட்டில் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அந்தக் காணொலியை ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி ட்வீட் செய்திருக்கிறது.

எனினும், கவனத்தைத் திசைதிருப்ப இந்தக் கொலைக்கு மதச்சாயம் பூச கொலையாளிகள் முயன்றிருக்கலாம் எனப் போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். கலீல் காணாமல்போனதைத் தொடர்ந்து, அவரது செல்போனிலிருந்து அவரது குடும்பத்துக்கு அலைபேசி அழைப்புகள் வந்தன; கலீல் தன்னிடம் 5 லட்ச ரூபாய் கடன் வாங்கியதாகவும், அதைத் திருப்பித் தரவில்லை என்றால் அவரது சிறுநீரகத்தை எடுத்து விற்றுவிடப்போவதாகவும் அதில் பேசியவர் மிரட்டியிருக்கிறார் எனப் போலீஸார் கூறுகின்றனர்.

x