லக்கிம்பூர் கெரி வாக்குச்சாவடியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்களித்த அஜய் மிஸ்ரா


ஏழு கட்டங்களாக நடைபெறும் உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின், நான்காவது கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்துவருகிறது. இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில், விவசாயிகள் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட லக்கிம்பூர் கெரி தொகுதியும் அடங்கும். அந்தச் சம்பவத்தில், மத்திய உள் துறை முன்னாள் அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா குற்றம்சாட்டப்பட்டு விவசாயிகள், எதிர்க்கட்சிகளின் கடும் அழுத்தத்தின் காரணமாகக் கைதுசெய்யப்பட்டார். எனினும், சமீபத்தில் அவருக்கு லக்னோ உயர் நீதிமன்றம் பிணை வழங்கியது. தேர்தல் நடக்கும் நேரத்தில் அவருக்குப் பிணை வழங்கப்பட்டது விமர்சனத்துக்குள்ளானது.

இந்நிலையில், இந்தத் தொகுதியில் வாக்களிக்க மத்திய அமைச்சர் நண்பகல் 12 மணி அளவில் அஜய் மிஸ்ரா வந்திருந்தார். அவரது வருகையை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். வாக்குச்சாவடியிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில்தான் அஜய் மிஸ்ராவின் வீடு உள்ளது. அவர் வருவதற்கு முன்பே அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அவர் வந்த பின்னர் பத்திரிகையாளர்களால்கூட அவரை நெருங்க முடியவில்லை. இத்தனைப் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஒருவர் வாக்குச்சாவடிக்குச் செல்ல முடியுமா என்று எண்ணும் அளவுக்கு அவரைச் சுற்றிப் போலீஸார் சூழ்ந்திருந்தனர்.

வாக்களித்துவிட்டு வந்த பின்னர், “இந்தத் தேர்தலில் விவசாயிகளின் கோபம் தாக்கத்தை ஏற்படுத்துமா?” என்றும், அவரது மகனுக்குப் பிணை வழங்கப்பட்டது குறித்தும் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, அவர் பதில் ஏதும் சொல்லவில்லை. புன்னகைத்தபடி இரண்டு விரல்களை வெற்றிச் சின்னமாகக் காட்டிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

லக்கிம்பூர் கெரியைச் சேர்ந்தவரான அஜய் மிஸ்ரா இந்தத் தேர்தலில், தனது சொந்த ஊருக்குள் பாஜகவுக்காக வாக்கு சேகரிக்கச் செல்லவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

x