தாய் மண்ணே வணக்கம்: உக்ரைனிலிருந்து நாடு திரும்பியவர்கள் உற்சாகம்!


போர்ப் பதற்றத்தில் இருக்கும் உக்ரைனிலிருந்து விமானம் மூலம் இந்தியாவுக்குத் திருப்பி அழைத்துவரப்பட்டவர்கள், பத்திரமாக நாடு திரும்பியதில் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். உக்ரைன் தலைநகர் கியேவிலிருந்து முதல் விமானம் 254 பயணிகளுடன் நேற்று நள்ளிரவு 11.30 மணிக்கு டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

நாடு திரும்பிய பலர் அங்கு மருத்துவக் கல்வி பயின்றுவந்த மாணவர்கள். விமான நிலையத்தில், அவர்களுக்காகப் பெற்றோர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். “ஊர் திரும்பியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. டெல்லி விமான நிலையத்தில் ஏற்பாடுகள் மிகச் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தன” என மாணவர்கள் கூறியிருக்கின்றனர். உக்ரைனில் பதற்றமான சூழல் நிலவுவதாகவும், அங்கிருந்து மீண்டு வந்தது நிம்மதி அளிப்பதாகவும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

உக்ரைன் எல்லையில், படைகளைக் குவித்திருந்த ரஷ்யா, உக்ரைனின் டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய தன்னாட்சிப் பிரதேசங்களின் சுதந்திரப் பிரகடனத்தை அங்கீகரித்ததைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்தது. அந்தப் பகுதிகளுக்கு ரஷ்யப் படைகளையும் அந்நாட்டு அதிபர் புதின் அனுப்பிவைத்தார். இதையடுத்து, உக்ரைனில் தங்கியிருக்கும் இந்தியர்கள் உடனடியாக நாடு திரும்புவது நல்லது எனச் சொல்லப்பட்டது. அவர்களை மீட்டுக்கொண்டுவர மத்திய அரசு முடிவெடுத்ததன் தொடர்ச்சியாக, பிப்ரவரி 21-ல் ஏர் இந்தியா விமானம் உக்ரைனுக்கு அனுப்பப்பட்டது.

இந்த விவகாரத்தில் சுமூகத் தீர்வு ஏற்பட வேண்டும் என இந்தியா வலியுறுத்திவருவது குறிப்பிடத்தக்கது.

x