இந்திய டிவி சேனல் விவாதத்தால் பிரச்சினைகள் தீர்க்கப்படாது... அதிகரிக்கும்: இம்ரான் கானுக்கு சசி தரூர் பதில்


இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வேறுபாடுகளுக்குத் தொலைக்காட்சி விவாதம் மூலம் தீர்வு காண பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு வரவேற்பு தெரிவித்திருக்கிறார் காங்கிரஸ் எம்.பி சசி தரூர். வழக்கம்போல் மெலிதான நகைச்சுவை கலந்து எழுதியிருக்கும் ட்வீட்டில், இந்திய செய்தி சேனல்களையும் ஒரு இடி இடித்திருக்கிறார்.

இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்றிருக்கும் இம்ரான் கான், அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதினுடன் பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். கடந்த 20 ஆண்டுகளில் ரஷ்யாவுக்குப் பயணம் செய்யும் முதல் பாகிஸ்தான் பிரதமர் எனும் பெருமையை இந்தப் பயணத்தின் மூலம் இம்ரான் கான் பெறுகிறார். இந்தப் பயணத்தின்போது ரஷ்ய அரசு சார்பில் நடத்தப்படும் ஆர்டி செய்தி சேனலுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது, “தொலைக்காட்சியில் நரேந்திர மோடியுடன் விவாதம் நடத்த விரும்புகிறேன்” என்று அவர் கூறினார். ஒரு விவாதத்தின் மூலம் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான முரண்களுக்குத் தீர்வு காணப்பட்டால், அது இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள 100 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு நன்மை பயக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான தனது ட்வீட்டில், “அன்புள்ள இம்ரான் கான், போருக்குப் போர் என்பதைவிட வாய்க்கு வாய் என்பது நல்லதுதான். ஆனால், இந்தியத் தொலைக்காட்சி விவாதங்களால் எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட்டதில்லை. பிரச்சினை அதிகரித்ததுதான் மிச்சம்” என்று சசி தரூர் குறிப்பிட்டிருக்கிறார். கூடவே, “டிஆர்பி-யை ஏற்ற முடியும் என்றால், எங்கள் தொலைக்காட்சித் தொகுப்பாளர்களில் சிலர் மூன்றாவது உலகப் போரைத் தொடங்கிவைப்பதில்கூட மகிழ்ச்சியடைவார்கள்” என்றும் கிண்டலடித்திருக்கிறார் சசி தரூர்.

x