அசாம் வெள்ளத்தால் 1.61 லட்சம் மக்கள் பாதிப்பு; 26 பேர் உயிரிழப்பு


கரீம்கஞ்ச்: அசாம் மாநிலத்தில் வெள்ள பாதிப்பு மிகவும் மோசமடைந்துள்ளது. வெள்ளத்தால் 15 மாவட்டங்களில் இதுவரை 1.61 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவது 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தகவல் படி, ஹைலாகாண்டு மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மாநிலம் முழுவது மழை வெள்ளத்தால் 26 பேர் உயிரிழந்துள்ளனர். கரீம்கஞ்ச் மாவட்டம் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 41,711 குழந்தைகள் உட்பட 1.52 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தின் நிலாம்பஜார், ஆர்.கே.நகர், கரீம்கஞ்ச் மற்றும் பதார்புர் வருவாய் வட்டத்தில் உள்ள 225 கிராமங்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 22,464 பேர் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.அதேபோல் 11 மாவட்டங்களில் 1378.64 ஹெர்டேர் பரப்பு பயிர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. 93,895 கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, ஜூன் 15 அன்று காசிரங்கா மாவட்ட நிர்வாக மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் கூட்டம் நடத்திய மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, இந்த வெள்ள காலத்தில் காசிரங்கா தேசிய பூங்காவில் உள்ள விலங்குகளின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

இந்தக் கூட்டத்தின் போது, "காசிரங்காவில் மூன்று கமாண்டோ படைகள் நிறுத்தப்படும். வனவிலங்குகள் தேசிய நெடுஞ்சாலைகளைக் கடக்கும் போது ஏற்படும் விபத்துக்களைத் தடுப்பதும், வெள்ளச் சூழலைப் பயன்படுத்தி வனவிலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கும் வேட்டையர்களைத் தடுக்கும் பணியினை இவர்கள் செய்வார்கள்.

மேலும் இந்த வெள்ளகாலத்தில் காசிரங்கா தேசிய பூங்காவில் புதிய வனக்காவல் படையைச் சேர்ந்த 600 பேர் பணியமர்த்தப்படுவர்" என்று முதல்வர் தெரிவித்திருந்தார்.

x