குடியரசுத் தலைவர் வேட்பாளராகிறாரா நிதீஷ்?


நிதீஷ் குமார்

பாஜகவுடனான உறவைத் துண்டித்துக்கொண்டால் நிதீஷ் குமாரை அடுத்த குடியரசுத் தலைவர் வேட்பாளராகப் பரிசீலிக்கலாம் என மகாராஷ்டிர அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான நவாப் மாலிக் கூறியிருக்கிறார். பல்வேறு கட்சிகளைத் தலைவர்கள் கலந்துபேசி இவ்விஷயத்தில் முடிவுசெய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

மும்பையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நவாப் மாலிக், ஐந்து மாநிலத் தேர்தல்களில் பாஜக தோல்வியைச் சந்திக்கும் என்று கூறினார். குறிப்பாக, 403 தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், 150 இடங்களுக்குக் குறைவாகத்தான் பாஜகவுக்குக் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, பாஜகவுக்கு எதிரான கட்சிகளை அணிதிரட்டும் முயற்சி தொடங்கியிருப்பதாகக் கூறிய அவர், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் எடுக்கும் முயற்சிகளையும், மகாராஷ்டிரத்தின் ஆளுங்கூட்சிக் கூட்டணியான மகா விகாஸ் அகாடி கூட்டணித் தலைவர்களைச் சந்திக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வந்ததையும் பற்றிக் குறிப்பிட்டார்.

நவாப் மாலிக்

எதிர்க்கட்சிகளின் கூட்டுத் தலைமையின்கீழ் அந்தக் கூட்டணி உருவாக்கப்படும் என்று கூறிய நவாப் மாலிக், காங்கிரஸ் இல்லாமல் அப்படி ஒரு கூட்டணியை உருவாக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார். செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அவர், எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் நிதீஷ் குமார் நிறுத்தப்படலாம் எனச் செய்திகள் வெளியாவதாகக் குறிப்பிட்டார்.

பிஹாரில் பாஜக கூட்டணியுடன் ஆட்சியில் இருக்கிறது நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி. இந்நிலையில், “பாஜகவுடனான உறவை முறித்துக்கொள்ளும் வரையில், இது தொடர்பாக ஆலோசனை நடத்த முடியாது. முதலில் பாஜகவுடனான உறவை அவர் துண்டிக்க வேண்டும். அதன் பின்னர்தான், அதுகுறித்துப் பேச முடியும். அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் அமர்ந்து இது குறித்து பரிசீலிக்கலாம்” என்றும் அவர் குறிப்பிட்டார். வரும் ஜூலை மாதம் குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக தோல்வியடையும்

1993-ல் உத்தர பிரதேசத்தில் ஆட்சியில் இருந்தபோது, பாஜக மத அடிப்படையிலான வன்முறையைத் தூண்டியது என்றும், அதன் காரணமாகவே அக்கட்சியை மக்கள் நிராகரித்துவந்தனர் என்றும் கூறிய நவாப் மாலிக், 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முறையும் அந்த வரலாறு திரும்பும் எனக் குறிப்பிட்டார்.

“25 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜகவை ஆட்சிப்பொறுப்புக்கு மக்கள் கொண்டுவந்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் அக்கட்சியின் அரசியலால் மக்கள் வெறுத்துப்போயிருக்கின்றனர்” என்று அவர் கூறினார்.

x