யோகி அப்படிப் பேசியிருக்கக் கூடாது: சட்டமன்றத்தில் சாடிய பினராயி விஜயன்!


உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10-ல் தொடங்கியது. அன்றைய தினம் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்ட காணொலிப் பதிவில், “உத்தர பிரதேசத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமான அற்புதமான விஷயங்கள் நிகழ்ந்திருக்கின்றன. கவனம்! இதை நீங்கள் தவறவிட்டுவிட்டால், கடந்த 5 ஆண்டுகளில் உழைத்த உழைப்பு வீணாகிவிடும். உத்தர பிரதேசம் காஷ்மீராகவோ, கேரளமாகவோ, மேற்கு வங்கமாகவோ மாறுவதற்கு அதிக நேரம் பிடிக்காது” எனக் கூறியிருந்தார்.

இதையடுத்து, “யோகி ஆதித்யநாத் அச்சப்படுவதுபோல உத்தரப் பிரதேசம் கேரளத்தைப் போல மாறிவிட்டால், சிறந்த கல்வி, சுகாதார சேவைகள், சமூக நலத் திட்டங்கள், சிறந்த வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை அம்மாநில மக்கள் அனுபவிப்பார்கள். மதத்தின் பெயராலோ சாதியின் பெயராலோ மக்கள் கொல்லப்படாத ஓர் இணக்கமான சமூகச் சூழலைப் பெறுவார்கள். உத்தர பிரதேச மக்களும் அதைத்தான் விரும்புவார்கள்” என பினராயி விஜயன் ட்விட்டரில் பதிலடி கொடுத்திருந்தார். அதில் யோகி ஆதித்யநாத்தையும் டேக் செய்திருந்தார்.

இந்நிலையில், யோகியின் வார்த்தைகளை மீண்டும் நினைவுகூர்ந்து கண்டனம் தெரிவித்திருக்கிறார் பினராயி விஜயன். கேரள சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் ஏ.என்.ஷம்சீர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அவர், அரசியல் லாபத்துக்காகக் கேரளத்தை இழிவுபடுத்தும் வகையில், பொருத்தமில்லாத விமர்சனத்தை யோகி முன்வைத்ததாகக் குற்றம்சாட்டியிருக்கிறார். இந்த விவகாரத்தில் ஆழமாகச் செல்ல விருப்பம் இல்லை எனக் கூறிய அவர், ஒரு மாநில முதல்வர் இரண்டு மாநிலங்களை ஒப்புமைப்படுத்திப் பேசுவது பொருத்தமானது அல்ல என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

“கேரளம் பல்வேறு துறைகளில் பெருமளவில் முன்னேறியிருக்கிறது. கேரளம் அடைந்திருக்கும் வளர்ச்சி இணையற்றது. யோகியின் கருத்துகள் பொருத்தமற்றவை; அரசியல் லாபத்துக்காகச் சொல்லப்பட்டவை” என்று பினராயி கூறினார். பல்வேறு வளர்ச்சிக் குறியீடுகளைக் கேரளம் அடைந்திருப்பதாக மத்திய அரசின் நிதி ஆயோக் கூறியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

x