பாடிதார் சமூகத்தினர் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறாவிட்டால் போராட்டம்: ஹர்திக் படேல் அறிவிப்பு


ஹர்திக் படேல்

பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி போராட்டம் நடத்திய பாடிதார் சமூகத்தினர் மீது தொடரப்பட்ட வழக்குகளை, மார்ச் 23-க்குள் குஜராத் அரசு திரும்பப் பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அம்மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் ஹர்திக் படேல் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

குஜராத் மக்கள்தொகையில் படேல் சமூகத்தினர் 12.3 சதவீதத்தினர். பாடிதார்கள் என்றும் அவர்கள் அழைக்கப்படுகின்றனர். அரசியல் ரீதியாகவும் சமூக அளவிலும் செல்வாக்கு மிக்க பாடிதார்கள், 2015-ல் தங்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு கிடைக்கப் பெற வலியுறுத்தி பெரும் போராட்டத்தில் குதித்தனர். 1981-ல் பக்‌ஷி ஆணையத்தின் பரிந்துரைகளின்படி சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கினார் அம்மாநில முதல்வராக இருந்த மாதவ் சிங் சோலங்கி. இதனால் தங்கள் வேலைவாய்ப்புகள் பறிபோனதாகக் கூறிவந்த படேல் சமூகத்தினர், ஒருகட்டத்தில் இப்படிப் போராட்டத்தில் இறங்கினர்.

பாடிதார் அனாமத் ஆந்தோலன் சமிதி எனும் பெயரில் இணைந்து படேல் சமூகக் குழுக்கள் நடத்திய போராட்டம், 2015 முதல் 2019 வரை நீடித்தது. இந்தப் போராட்டத்தில் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. 14 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 600-க்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்டனர். பல்வேறு வழக்குகளின் கீழ் 438 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. அவற்றில் 390 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுவிட்டாலும், பலர் மீது இன்னமும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தப் போராட்டத்தின் விளைவாக, அம்மாநில பாஜக அரசுக்கு எதிராகப் பெரும் ஆளுமையாக உயர்ந்த ஹர்திக் படேல் பின்னர், காங்கிரஸ் கட்சியில் இணைந்துவிட்டார். பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டுவந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாடிதார் அனாமத் ஆந்தோலன் சமிதி உறுப்பினர்கள் மீது போடப்பட்ட குற்ற வழக்குகளை மார்ச் 23-ம் தேதிக்குள் திரும்பப் பெறாவிட்டால், மாநிலம் தழுவி அளவில் பெரும் போராட்டத்தை நடத்தப்போவதாக ஹர்திக் படேல் கூறியிருக்கிறார்.

x