இந்துக்களை காங்கிரஸ் கட்சி நம்பவில்லை: ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் கருத்து


லக்னோ: பிரியங்கா காந்தியை வயநாட்டில் போட்டியிட வைத்ததன் மூலம், இந்துக்களை காங்கிரஸ் நம்பவில்லை என்பதை நிரூபித்துள்ளது என அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் கூறியுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு, ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றிபெற்றார். இவ்வாறு 2 தொகுதிகளிலும் வெற்றி பெறும் ஒருவர் தேர்தல் முடிவு வெளியான 14 நாட்களுக்கும் ஏதேனும் ஒரு தொகுதியை விட்டுத்தரவேண்டும்.

அந்த வகையில் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வார் எனவும் அந்த தொகுதியில் அவரது சகோதரியும் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்றும் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்தார்.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியில் நீக்கப்பட்ட ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் கூறும்போது, “காங்கிரஸ் கட்சியில் பிரியங்கா காந்தி மிகவும் பிரபலமானவர். அவரை காங்கிரஸ் தலைவராக்கி யிருக்க வேண்டும். ஆனால் இடைத்தேர்தலில் அவருக்கு மக்களவை சீட் கொடுத்து அவரது அந்தஸ்தை குறைக்க முயற்சி நடைபெறுகிறது.

மேலும் பிரியங்கா காந்தியை வயநாட்டில் போட்டியிட வைத்ததன் மூலம், இந்துக்களை காங்கிரஸ் நம்பவில்லை என்பதை நிரூபித்துள்ளது. காங்கிரஸ் இந்துக்களை நம்பியிருந்தால், பிரியங்காவை வேறு இடத்தில் போட்டியிடச் செய்திருக்கும்” என்றார்.

வயநாட்டில் பிரியங்கா காந்தியை நிறுத்தும் முடிவை ஆச்சார்யா பிரமோத் மட்டுமல்ல பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஜாத் பூனாவாலாவும் விமர் சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து ஷெஜாத் பூனாவாலா கூறும்போது, “இந்த முடிவு காங்கிரஸ் ஒரு கட்சி அல்ல, மாறாக ‘குடும்ப வியாபாரம்’ என்பதை நிரூபிக்கிறது” என்று கூறியுள்ளார்.

x