இப்படியான பரிசோதனைகளெல்லாம் தோல்வியில்தான் முடிந்திருக்கின்றன: கேசிஆருக்குப் பாடம் எடுத்த ஃபட்னவீஸ்!


தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவருமான சந்திரசேகர் ராவ், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவையும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரையும் நேற்று மும்பையில் சந்தித்துப் பேசினார். மத்திய பாஜக அரசுக்கு எதிரான அணிதிரட்டலின் ஒரு பகுதி இது எனக் கருதப்படுகிறது.

இந்நிலையில், இதுதொடர்பாக அவுரங்காபாதில் செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், “மாநில முதல்வர்கள் இப்படியெல்லாம் சென்று பிற முதல்வர்களைச் சந்திப்பது புதிதல்ல. நான் முதல்வராக இருந்தபோது என்னையும் சந்தித்துப் பேசியிருக்கிறார் சந்திரசேகர் ராவ்” என்று கூறியிருக்கிறார்.

“இதற்கு முன்பும், 2019 மக்களவைத் தேர்தலின்போது, இந்தத் தலைவர்கள் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்தார்கள். ஆனாலும், அதில் பலனேதும் கிடைக்கவில்லை. பல மாநிலங்களில் இப்படியான பரிசோதனைகள் நடந்திருக்கின்றன. ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை” என்று கூறினார். 2019 மக்களவைத் தேர்தலில் தெலங்கானாவில் பாஜக 4 இடங்களில் வென்றதைச் சுட்டிக்காட்டிய ஃபட்னவீஸ், வருங்காலத்தில் அம்மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

x