தாய் மொழியில் கல்வி கற்றால் மன ரீதியில் முன்னேற்றம் அளிக்கும்!


``தாய் மொழியில் கல்வி கற்பது மன ரீதியிலும், கல்வி ரீதியிலும் முன்னேற்றம் அளிக்‍கும்'' என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

சர்வதேச தாய்மொழி தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், 2022 - 2023ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கல்வித்துறைக்‍கென கொடுக்‍கப்பட்டுள்ள முக்‍கியத்துவம் குறித்து பிரதமர் மோடி, காணொலி மூலம் கருத்தரங்கம் ஒன்றில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள், தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த பெரிதும் உதவும். தேசிய டிஜிட்டல் பல்கலைக்கழகம் அமைக்கும் முடிவால் கல்வியில் இடப்பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். நமது இளம் தலைமுறைதான் நாட்டின் எதிர்கால தலைவர்கள். எனவே இன்றைய இளம் தலைமுறையை மேம்படுத்துவது என்பது இந்தியாவின் எதிர்காலத்தை மேம்படுத்துவதாகும்.

2022 மத்திய பட்ஜெட்டில் கல்வித்துறை தொடர்பான 5 விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. முதலாவதாக, தரமான கல்வியை உலகமயமாக்கல், இரண்டாவது, திறன் மேம்பாடு, மூன்றாவது, நகர்ப்புற திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு, நான்காவது இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் உருவாக்குதல், ஐந்தாவது, விஷுவல் அனிமேஷன் தொழில்நுட்பம் சார்ந்த விளையாட்டுகள். தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த இந்த பட்ஜெட் உதவும். தேசிய டிஜிட்டல் பல்கலைக்கழகம் என்பது ஒரு முன்னோடி திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம், கல்வி பயில மாணவர்களுக்கு எண்ணற்ற இடங்கள் இருக்கும். இதனால் பல்கலைக்கழகங்களில் இருக்கை பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

தாய்மொழியில் கல்வி கற்பது குழந்தைகளின் மனவளர்ச்சியுடன் தொடர்புடையது. தாய் மொழியில் கல்வி கற்பது மனரீதியிலும், கல்வி ரீதியிலும் முன்னேற்றம் அளிக்‍கும். பல மாநிலங்களில் மருத்துவம் மற்றும் தொழில்நுட்பக் கல்வி, அந்தந்த மாநில மொழிகளில் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் டிஜிட்டல் பரிவர்த்தனை தொடங்கப்படுவதை உறுதிசெய்யுமாறு அனைத்து பங்குதாரர்களையும் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்.

x