மணிப்பூரின் ஏழை வேட்பாளர்: வெற்றிக்குக் குறிவைக்கும் வேலையில்லா பட்டதாரி!


மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் நிங்தோக்ஜாம் போபிலால் சிங், மாநில எல்லையைத் தாண்டி தேசிய அளவில் கவனம் ஈர்க்கிறார். காரணம், கோடீஸ்வரர்கள் போட்டியிடும் இந்தத் தேர்தலில், போபிலால் சிங் மட்டும்தான் எந்தச் சொத்தும் இல்லாதவர். இளம் வேட்பாளரும் அவர்தான்!

60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவைக்கு, பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 5 என இரண்டு கட்டமாகத் தேர்தல் நடக்கிறது. முதற்கட்டத் தேர்தலில் போட்டியிடும் 173 வேட்பாளர்களில் 91 பேர் கோடீஸ்வரர்கள். போபிலால் சிங் மட்டும்தான் எந்தச் சொத்தும் இல்லாதவர். தேர்தல் ஆணையத்தில் அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் அவருக்கு எந்தவிதமான சொத்தும் இல்லை எனத் தெரியவந்திருக்கிறது.

மணிப்பூர் அரசியலில், தேர்தலில் போட்டியிட வேண்டுமானால் வளமான பொருளாதாரப் பின்புலம் அவசியம். போபிலால் மட்டும்தான் விதிவிலக்காக அந்த வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்.

பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த போபிலால் சிங், அம்மாநிலத்தின் ஒரே தனித்தொகுதியான செக்மாய் தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பிய அவர், அக்கட்சி கைவிரித்துவிட்டதால் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகியிருக்கிறார்.

சரி, போபிலாலின் வாழ்வாதாரம்தான் என்ன?

“வேலையில்லாத பட்டதாரி நான். எனது கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கையை நடத்துகிறேன்” என்கிறார் போபிலால். வாக்குக்குப் பணம் கொடுக்கும் தேவையும் தனக்கு இல்லை எனக் கூறியிருக்கும் அவர், “என் தொகுதி வேட்பாளர்கள் பணத்துக்குப் பின்னால் அலைபவர்கள் அல்ல. பணத்தைக் கொடுத்து அவர்களின் வாக்குகளை வெல்ல முடியாது” என்று கூறியிருக்கிறார்.

உள்ளூர் மக்களே அவரது தேர்தல் செலவுகளைக் கவனித்துக்கொள்கிறார்களாம். “அவர் சமூகத்துக்குத் தொண்டாற்றும் இளைஞர். எதிர்காலத் தலைமுறையினருக்கான திட்டங்களைக் கொண்டிருப்பதுதான் அவர் மீது எங்களுக்கு அபிமானத்தை ஏற்படுத்தியது” என்கிறார்கள் உள்ளூர் மக்கள். வென்றாலும் தோற்றாலும் எதிர்காலத்தில் இளைஞர்கள் அரசியலில் நுழைய ஓர் ஊக்கசக்தியாக போபிலால் இருக்கிறார் என்கிறார்கள் அவரது கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

நம்மூர் உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களே கோடிக்கணக்கில் தேர்தல் செலவு செய்ததாகச் செய்திகள் வெளியாகும் நிலையில், போபிபால் போன்றோர் நமக்குப் பொறாமை ஏற்படுத்தத்தான் செய்கிறார்!

x