மைனர் சிறுமி காதலை போக்சோ தடுக்காது!


’பதின்பருவத்தினரின் காதல் உறவை தடுப்பதற்காக போக்சோ சட்டம் பிறப்பிக்கப்படவில்லை’ என்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபருக்கு ஜாமீன் வழங்கி அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

உத்தரப் பிரதேசம் ஃபதேபூர் நகரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அதுல் மிஷ்ராவுக்கும் பள்ளி மாணவிக்கும் இடையில் காதல் மலர்ந்தது. தங்களது காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் ஜோடியாக வீட்டிலிருந்து தப்பி ஓடினர். முதலில் லக்னோ சென்றவர்கள் பிறகு அங்கிருந்து டெல்லி சென்று கோயில் ஒன்றில் நவம்பர் 2019-ல் திருமணம் செய்துகொண்டனர். திருமணம் செய்தபோது சிறுமிக்கு வயது 14. உடனடியாக சிறுமியின் தந்தை ஃபதேபூர் மாவட்ட காகா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனை அடுத்து அதுல் மிஷ்ரா மீது கடத்தல், பாலியல் வன்புணர்வு, போக்சோ மற்றும் எஸ்.சி./ எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போலீசார் அதுல் மிஷ்ராவை வலைவீசித் தேடினர்.

இரண்டாண்டுகள் திருமண வாழ்க்கையை நிம்மதியாகத் தொடர்ந்த தம்பதிக்குக் குழந்தை பிறந்தது. இந்நிலையில் 2021-ல் அக்டோபர் 3-ம் தேதி அதுல் மிஷ்ரா கைது செய்யப்பட்டார். சிறுமி உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள ராஜ்கியா பல்கிர் என்ற சமூக குழந்தைகள் நலப் பாதுகாப்பு மையத்தில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ராகுல் சதுர்வேதி, “வயது வந்தவர்களுக்கும் பதின்பருவத்தினருக்கும் இடையில் காதல் உறவு ஏற்படும் சம்பவங்களில் போக்சோ சட்டம் பல ஜோடிகள் மீது பாயும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல், ஆபாச வீடியோக்கள் உள்ளிட்ட பாலியல் வன்கொடுமைகளை தடுக்கவே இந்திய அரசமைப்பு சட்ட பிரிவு 15-ன்கீழ் போக்சோ சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், காதல் உறவில் ஈடுபடும் பதின்பருவத்தினரை பிரிக்கவே அவர்களது பெற்றோரும் உறவினர்களும் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து போக்சோ சட்டத்தின்கீழ் புகாரை ஜோடித்து விடுகிறார்கள்” என்று கூறினார்.

மேலும் இந்த வழக்கு குறித்துப் பேசுகையில், “சட்டத்தின் முன்பு 18 வயதுக்கு உட்பட்ட சிறுமியின் ஒப்புதல் செல்லாது என்பது உண்மைதான். ஆனால், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிறுமி ஒரு குழந்தையை பிரசவித்திருக்கிறார். கடந்த நான்கு, ஐந்து மாதங்களாக சமூக குழந்தைகள் நலப் பாதுகாப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தாலும் தனது பெற்றோருடன் செல்ல விரும்பவில்லை என்பதை எழுத்துப்பூர்வமாகத் தந்திருக்கிறார். பச்சிளம் குழந்தையுடன் அந்த சிறுமி மையத்தில் வைக்கப்பட்டிருப்பதே மிகப் பெரிய துயரமாகும்.

இந்நிலையில் சிறுமியைத் தனது குழந்தையுடன் உடனடியாக மையத்தை விட்டு விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிடுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமியும் குற்றம்சாட்டப்பட்ட நபரும் காதலித்து திருமணம் செய்துகொண்டிருக்கையில் அவர்களது குழந்தை பெற்றோர் இருவரின் அரவணைப்பில் வளரும் உரிமை கொண்டது. அத்தகைய குழந்தைக்கும் தாய் தந்தையின் அன்பும் அரவணைப்பும் மறுக்கப்படுவது மனிதநேயமற்ற காரியம். ஆகையால் குற்றம்சாட்டப்பட்டவருக்கு நீதிமன்றம் ஜாமீன் அளிக்கிறது” என்று தீர்ப்பளித்தார்.

x