“சுயமரியாதையைக் காக்க பணியைத் துறந்தேன்!”


மாதிரிப் படம்

கர்நாடக மாநிலம், தும்கூருவில் உள்ள ஜெயின் பியூ கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராகப் பணியாற்றிவந்தவர் சாந்தினி. இன்று, அவர் தனது பணியை ராஜினாமா செய்திருக்கிறார். இதற்கு முன்னர் ஹிஜாபுக்குத் தடை சொல்லாத கல்லூரி நிர்வாகம், தற்போது ஹிஜாபை அகற்றச் சொல்வதாகத் தனது ராஜினாமா கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

“மூன்று ஆண்டுகளாக ஜெயின் பி.யூ கல்லூரியில் வேலை செய்துவருகிறேன். எந்தப் பிரச்சினையையும் நான் எதிர்கொள்ளவில்லை. ஆனால், பாடம் நடத்தும்போது நான் ஹிஜாப் அல்லது எந்தவிதமான மத அடையாளத்தையும் அணியக் கூடாது என்று கல்லூரி முதல்வர் என்னிடம் சொன்னார். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக ஹிஜாப் அணிந்துதான் நான் பாடம் நடத்தியிருக்கிறேன். இந்தப் புதிய முடிவு எனது சுயமரியாதை மீது தாக்குதல் நடத்துகிறது. அதனால்தான் நான் ராஜினாமா செய்ய முடிவெடுத்தேன்” என்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்திருக்கிறார்.

எனினும், “நானோ அல்லது கல்லூரி நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களோ அவரை ஹிஜாபை அகற்றுமாறு ஒருபோதும் கூறவில்லை” எனக் கல்லூரி முதல்வர் கே.டி.மஞ்சுநாத் கூறியிருக்கிறார்.

சமீப காலமாக, கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவருவதற்கு எதிராகப் போராட்டங்கள் நடந்துவந்தன. இதுதொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், கல்வி நிறுவனங்களில் எந்த மத அடையாளங்களையும் அணிந்துவரக் கூடாது எனத் தற்காலிகத் தடை விதித்தது.

இதற்கிடையே, இந்த விவகாரத்தில் பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவிட்டிருந்த கர்நாடக அரசு, தற்போது படிப்படியாகக் கல்வி நிறுவனங்களைத் திறந்துவருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு நுழையும் மாணவிகள், ஆசிரியைகளிடம் ஹிஜாபை அகற்றுமாறு நிர்வாகங்கள் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

x