45 நிமிடத்தில் தெற்கு மும்பை டு நவி மும்பை: இந்தியாவின் முதல் நீர்வழிப் போக்குவரத்து டாக்ஸி!


மகாராஷ்டிரத்தின் தெற்கு மும்பையிலிருந்து நவி மும்பைக்குச் செல்ல நினைக்கிறீர்கள். ஆனால், போக்குவரத்து நெரிசல் அதிகம் என்பதால் சென்று சேர தாமதமாகும் எனத் தெரிகிறது. முன்பெல்லாம் இப்படி ஒரு சூழல் வந்தால் உங்களுக்கு வேறு வழியே இல்லை. இனி அந்தக் கவலை இல்லை. வேகப் படகு டாக்ஸி மூலம் 45 நிமிடங்களில் நவி மும்பையைச் சென்றடைந்துவிடலாம். ஆம், இந்தியாவின் முதல் நீர்வழிப் போக்குவரத்து டாக்ஸியை மகாராஷ்டிர அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதனால், வழக்கமாக 90 முதல் 100 நிமிடங்கள் நீளும் பயணம், முக்கால் மணி நேரத்திலேயே முடிந்துவிடும்.

என்ன, கொஞ்சம் கூடுதலாகச் செலவாகும். ஒரு நபருக்கு 1,200 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மாதாந்திர பாஸ் எடுப்பவர்களுக்கு 12,000 ரூபாய் செலவாகும்.

நவி மும்பையின் பெலாப்பூர் ஜெட்டி பகுதியிலிருந்து செல்லும் படகுப் போக்குவரத்தை, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தொடங்கிவைத்தார். மத்திய கப்பல் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், தெற்கு மும்பையிலிருந்து நவி மும்பை செல்லும் படகுப் போக்குவரத்தைத் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

8.37 கோடி ரூபா மதிப்பீட்டில் தொடங்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டத்தில், மத்திய அரசும் மாநில அரசும் தலா 50 சதவீத நிதியை வழங்குகின்றன.

காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்தப் படகுப் போக்குவரத்து நடைபெறும். பருவமழைக் காலங்கள் தவிர்த்து 330 நாட்களுக்கு இது நடைபெறும்.

x