நேருவின் வேகம், மோடியின் யோகம்!


புகழ்பெற்ற எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் எழுதியிருக்கும், ‘எ லிட்டில் புக் ஆஃப் இந்தியா: செலிபிரேட்டிங் 75 இயர்ஸ் ஆஃப் இண்டிபெண்டென்ஸ்’ நூலில், இந்தியாவின் முதல் பிரதமர் நேரு குறித்தும், இன்றைய பிரதமர் மோடி குறித்தும் சுவாரசியமான குறிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. இது குறித்து என்டிடிவி செய்தி இணையதளம் வெளியிட்டிருக்கும் தகவல்கள் கவனம் ஈர்க்கின்றன.

87 வயதான ரஸ்கின் பாண்ட் பிரிட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்தவர். பிறந்தது, வளர்ந்தது, வாழ்வது, அகிலம் முழுவதும் புகழ்பெற்ற எழுத்தாளராகப் பரிணமித்தது என எல்லாமே இந்தியாவில்தான். குழந்தை இலக்கியத்தில் சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்கள் என ஏராளமான படைப்புகளைத் தந்தவர். அவரது பல நூல்கள் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு விரிவான வாசக தளத்தில் வரவேற்பைப் பெற்றவை. அந்த வகையில், தான் வாழும் தேசத்தின் நினைவுகளை உள்ளடக்கிய நூலாக இதை அவர் எழுதியிருக்கிறார்.

ஜவாஹர்லால் நேரு மக்களின் மனிதர், நிறைய பரிசுகளைத் தந்தவர், சாதனைகளைச் செய்தவர் என இந்தப் புத்தகத்தில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல், இன்றைய பிரதமர் மோடி எளிமையான தொடக்கத்திலிருந்து உருவாகி, தனது அரசியல் சாதுரியம் மற்றும் யோக மனஉறுதியின் மூலம் உயர்ந்த இடத்துக்கு வந்தவர் என்றும் எழுதியிருக்கிறார்.

1934 மே 19-ல் பஞ்சாப் மாகாணத்தின் கசோலியில் பிறந்த ரஸ்கின் பாண்ட், இந்தியா சுதந்திரம் அடைந்தபோது பள்ளிச் சிறுவன். சிம்லாவில் பிஷப் காட்டன் உண்டு உறைவிடப் பள்ளியில் படித்துவந்த அவர், தன் பள்ளியில் யூனியன் ஜாக் கொடி இறக்கப்பட்டு இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்ட காட்சியையும் இப்புத்தகத்தில் நினைவுகூர்ந்திருக்கிறார்.

நேருவின் சுறுசுறுப்பு அனைவரும் அறிந்த விஷயம். அவரது மெய்ப் பாதுகாவலராக இருந்த ஒருவர் தன்னிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் குறித்து ரஸ்கின் பாண்ட் குறிப்பிட்டிருக்கும் தகவல்கள், நேரு எத்தனை வேகமாக இயங்கிவந்தார் என்பதை உணர்த்துகின்றன.

“நேருவின் பாதுகாவலராக இருந்த ஒருவர், 1960-ல் என்னைச் சந்தித்தார். ‘நேருவுக்கு ஈடுகொடுப்பது கடினமான காரியமாக இருந்தது. எதிர்பாராத திசைகளில் எல்லாம் துரிதமாகத் திரும்பிவிடுவார். அவர் பின்னால் ஓடியே என் எடை குறைந்துவிட்டது’ என்று என்னிடம் அவர் சொன்னார். நான் அவரைச் சந்தித்தபோது, எடை கூடியிருந்தார். தனது பணிகளை வேறொரு பாதுகாவலருக்குக் கைமாற்றிவிட்டதில் மனிதர் ஆசுவாசமடைந்திருந்தார்” என வேடிக்கையாகக் குறிப்பிட்டிருக்கிறார் ரஸ்கின் பாண்ட்.

“நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, வாஜ்பாய், மன்மோகன் சிங் உட்பட பல சிறந்த பிரதமர்கள் நமக்குக் கிடைத்திருக்கிறார்கள். தற்போது பிரதமர் மோடி, எளிய பின்னணியிலிருந்து தொடங்கியவர். அவரது அரசியல் சாதுரியம், இயல்பான புத்திசாலித்தனம் மற்றும் யோக மன உறுதி ஆகியவை இரண்டு பொதுத் தேர்தல்கள் மூலம் அவரை உயர்ந்த இடத்துக்குக் கொண்டுவந்திருக்கின்றன” என்று ரஸ்கின் பாண்ட் கூறியிருக்கிறார்.

லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய், மன்மோகன் சிங் என இந்தியப் பிரதமர் பதவியை அலங்கரித்த பல தலைவர்கள் குறித்தும் இந்நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியாவின் நதிகள், வனங்கள், இலக்கியம், பண்பாடு, காட்சிகள், ஒலிகள், வண்ணங்கள் என ஏராளமான விஷயங்கள் இந்தச் சிறிய புத்தகத்தில் பதிவாகியிருக்கின்றன. பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா பதிப்பகம் இந்நூலை வெளியிட்டிருக்கிறது.

x