அழிக்கப்படும் ஆன்லைன் செய்திகள்: கலக்கத்தில் காஷ்மீர் பத்திரிகையாளர்கள்


காஷ்மீரிலிருந்து வெளியாகும் இணைய இதழ்களிலும், பத்திரிகைகளின் இணையதளங்களிலும் கடந்த சில மாதங்களாகப் பல்வேறு செய்திகள், கட்டுரைகள் அழிக்கப்பட்டிருப்பதாகக் காஷ்மீர் பத்திரிகையாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

அரசை விமர்சிக்கும் வகையிலான செய்திகள், பாதுகாப்புப் படைகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகச் சொல்லும் கட்டுரைகள் என ஆயிரக்கணக்கான ஆன்லைன் செய்திகளும் கட்டுரைகளும் காணாமல் போயிருப்பதாக அவர்கள் குமுறுகின்றனர். இதுதொடர்பான செய்தியை அல் ஜஸீரா ஊடகம் நேற்று வெளியிட்டிருக்கிறது.

காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டக்கூறு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு ஊடகங்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும், பத்திரிகையாளர்கள் மீது குற்றவழக்குகள் தொடுக்கப்படுவதாகவும் கூறியிருக்கும் காஷ்மீர் பத்திரிகையாளர்கள், பத்திரிகைகளுக்குக் கிடைத்துவந்த அரசு விளம்பரங்களும் பெருமளவு குறைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்விஷயம் தொடர்பாக, விளக்கமளித்திருக்கும் சில பத்திரிகை நிறுவனர்கள் இது தொழில்நுட்பப் பிரச்சினை என்றே தெரிவித்திருக்கிறார்கள். எனினும், பலர் கருத்து தெரிவிக்காமல் மவுனம் காக்கின்றனர்.

இதனால், கடும் உழைப்பைச் செலுத்தி கள ஆய்வு செய்து செய்திகளையும் கட்டுரைகளையும் எழுதிய பத்திரிகையாளர்கள் கவலையடைந்திருக்கின்றனர். தங்கள் பெயருடன் வெளிவந்த செய்திக் கட்டுரைகள் தற்போது ஆன்லைனில் கிடைக்காதது, அவர்களைத் தார்மிக ரீதியில் கடுமையாகப் பாதித்திருக்கிறது. பிற ஊடக நிறுவனங்களுக்கு நேர்காணலுக்குச் சென்றாலோ, உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும்போதோ தாங்கள் எழுதியவை எனக் காட்ட காத்திரமான கட்டுரைகள் ஆன்லைனில் கிடைக்காது என்பதும் அவர்களைக் கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

வருவாயின் பெரும்பகுதியில் அரசின் விளம்பரங்களையே சார்ந்திருக்கும் நாளிதழ்கள் இவ்விஷயத்தில் என்ன செய்வது எனத் தடுமாறிக்கொண்டிருக்கின்றன.

இது காஷ்மீரின் ரத்தம் தோய்ந்த வரலாற்றைத் திரிக்கும் முயற்சி என்றும், நினைவின் மீதான போர் என்றும் அல் ஜஸீரா ஊடகத்திடம் பேசிய 15-க்கும் மேற்பட்ட காஷ்மீர் பத்திரிகையாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

1990-களில், நீதிக்குப் புறம்பான கொலைகள், காணாமலடிக்கப்படும் இளைஞர்கள் எனப் பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பாகக் காத்திரமான செய்திகளை வெளியிட்டுவந்தவை காஷ்மீர் நாளிதழ்கள். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, பெரும்பாலும் அரசின் அறிக்கைகள்தான் காஷ்மீர் பத்திரிகைகளில் பிரதானமாக இடம்பெறுகின்றன. அவற்றைத் தாண்டி, அரசை விமர்சிக்கும் வகையிலான கட்டுரைகள் வெளியிடப்பட்டால் சட்ட நடவடிக்கைகளைப் பத்திரிகையாளர்கள் சந்திக்க நேர்கிறது.

சமீபத்தில், தேசவிரோதக் கருத்து அடங்கிய கட்டுரையை ஆன்லைனில் பிரசுரித்ததற்காக ‘காஷ்மீர் வல்லா’ இதழின் ஆசிரியர் ஃபஹாத் ஷா கைதுசெய்யப்பட்டார். அந்த இதழுக்குக் கட்டுரை எழுதிவந்த சஜாத் அஹ்மத் தார் எனும் நபர் மீது பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு தொடரப்பட்டது. அந்தச் சட்டத்தின்படி எந்த விசாரணையும் இன்றி ஒருவர் 6 மாதங்களுக்குச் சிறையில் அடைபட நேரிடும்.

சமீபத்தில், 300 பத்திரிகையாளர்கள் அங்கம் வகிக்கும் ‘காஷ்மீர் பிரஸ் கிளப்’ உள்ளூர் அதிகாரிகளால் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசியுங்கள்:

உலகம் முழுதும் முடக்கப்படும் ஊடகர்கள்!

x