“ஷரியத் மூலம் அல்ல... அரசமைப்புச் சட்டத்தின் மூலம்தான் அரசு நிர்வாகம் நடக்க வேண்டும்” - யோகி ஆதித்யநாத்


ஹிஜாப் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அரசு நிர்வாகம் அரசமைப்புச் சட்டத்தின்படிதான் நடக்க வேண்டும்; ஷரியத் சட்டத்தின் மூலம் அல்ல என்று கூறியிருக்கிறார்.

உத்தராகண்ட், கோவா மாநிலங்களில் இன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில், உத்தர பிரதேசத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருக்கும் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் கட்சி, ஹிஜாப் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்திருக்கிறார்.

ஹிஜாப் விவகாரம் தொடர்பாகப் பேசிய அவர், “நமது (முஸ்லிம்) மகள்களை விடுவிக்க, அவர்களுக்கு உரிமை அளிக்கம் உரிய மரியாதை கிடைக்கச் செய்ய முத்தலாக்கைப் பிரதமர் தடை செய்தார். முஸ்லிம் பெண்ணுக்கு மரியாதை கிடைப்பதை உறுதிசெய்ய, அரசமைப்புச் சட்டத்தின்படிதான் ஆட்சி நடக்க வேண்டும்; ஷரியத் சட்டத்தின்படி அல்ல” என்று குறிப்பிட்டார்.

“ஹிஜாப் அணிந்த ஒரு பெண் ஒருநாள் இந்தியாவின் பிரதமராக வருவார்” என அனைத்திந்திய மஜ்லீஸ்-ஈ-இத்திஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவர் அசதுதீன் ஒவைஸி கூறியது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த யோகி இவ்வாறு கூறியிருக்கிறார்.

“நாட்டிலும், நாட்டின் நிறுவனங்களிலும் தனிப்பட்ட மத நம்பிக்கைகளை நாம் திணிக்கக்கூடாது. ஊழியர்கள் அனைவரும் காவி உடை அணிந்துவர வேண்டும் என நான் வலியுறுத்த முடியுமா? பள்ளிகளில் ஆடைக் கட்டுப்பாடு கொண்டுவரப்பட வேண்டும்” என்று கூறிய யோகி, “அரசமைப்புச் சட்டத்தின்படி ஆட்சி நடத்தப்பட்டால், பெண்கள் உரிய மரியாதையையும் பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் பெறுவார்கள்” என்று குறிப்பிட்டார்.

x