‘ஆளுநர்களின் அதிகார துஷ்பிரயோகம்’: அணிதிரளும் எதிர்க்கட்சி முதல்வர்கள்


பாஜக அல்லாத மாநிலங்களில் ஆளும் கட்சிகளின் முதல்வர்கள், நீண்டகாலமாகவே ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களின் குறுக்கீடு இருப்பதாகப் புகார் தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், மகராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகியோரை ஓரணியில் திரட்டும் முயற்சிகள் நடந்துவருகின்றன.

“அன்புக்குரிய தீதி மம்தா என்னை தொலைபேசியில் அழைத்து, பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் அரசமைப்புச் சட்ட மீறலிலும், அதிகார துஷ்பிரயோகத்திலும் ஈடுபடுவது குறித்து கவலை தெரிவித்தார். எதிர்க்கட்சி முதல்வர்கள் இணைந்து கூட்டம் நடத்துவது குறித்தும் யோசனை தெரிவித்தார். மாநில சுயாட்சியை நிலைநாட்டுவதில் திமுக உறுதியாக இருப்பதாக அவரிடம் தெரிவித்தேன். எதிர்க்கட்சி முதல்வர்களின் மாநாடு விரைவில் டெல்லியில் நடைபெறும்” என்று நேற்று மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்திருந்தார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை முடக்குவதாக ஆளுநர் ஜகதீப் தங்கர் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் வேகம் பெறுகின்றன. மேற்கு வங்க அரசின் பரிந்துரைப்படியே கூட்டத் தொடரை ஒத்திவைத்ததாக ஜகதீப் தங்கர் விளக்கமளித்திருந்தாலும், இவ்விஷயத்தில் ஒரு தீர்வு காண்பது என எதிர்க்கட்சி முதல்வர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்.

ஜனநாயகத்தின் காஸ் சேம்பராக மேற்கு வங்கம் மாறிவருவதாக ஜகதீப் தங்கர் போட்ட சர்ச்சை ட்வீட் காரணமாக அவரை ட்விட்டரில் ப்ளாக் செய்திருந்தார் மம்தா. மேற்கு வங்கத்தில் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளுநருக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவரப்போவதாக திரிணமூல் காங்கிரஸ் அறிவித்திருக்கிறது. தமிழகத்தில் நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதும் முதல்வர் எதிர் ஆளுநர் மோதலை அதிகரித்திருக்கிறது.

இதற்கிடையே, நேற்று (பிப்.13) செய்தியாளர்களைச் சந்தித்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், மும்பை சென்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேயைச் சந்திக்கப்போவதாகக் கூறினார். மம்தா விரைவில் ஹைதராபாத் வந்து தன்னைச் சந்திக்கப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார். பாஜக அல்லாத , காங்கிரஸ் அல்லாத கட்சிகளை அணிதிரட்டும் முயற்சிகளிலும் அவர் இறங்கியிருக்கிறார்.

பாஜகவுடன், காங்கிரஸையும் ஒதுக்கிவைக்கும் முயற்சியில் சந்திரசேகர் ராவ் இறங்குவது, காங்கிரஸுடன் கூட்டணியில் இருக்கும் திமுகவுக்கு உவப்பளிக்குமா என்பது முக்கியமான கேள்வி. நீண்டகாலமாக துணைநிலை ஆளுநரின் குறுக்கீடுகளைச் சந்தித்த அனுபவம் கொண்ட டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இந்த முயற்சியில் இணைவாரா என்பது மற்றொரு கேள்வி. பாஜக எதிர்ப்பு எனும் ஒற்றைப் புள்ளியில் ஒன்றிணைவது தற்சமயம், தேர்தல்களில் பலனளிக்கலாம். ஆனால், நீடித்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால்தான் பாஜகவை அசைத்துப் பார்க்க முடியும்.

உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுவிடவில்லை. உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவாக மம்தா களமிறங்கியதைத் தாண்டி, எதிர்க்கட்சிகள் மத்தியில் உறுதியான பிணைப்பு இன்னமும் ஏற்பட்டுவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

x