உத்தராகண்ட், கோவாவில் இன்று ஒரே கட்டமாகத் தேர்தல்... உத்தர பிரதேசத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு


வாக்குப்பதிவு இயந்திரம்

இன்று (பிப்.14) காலை 7 மணி முதல் உத்தர பிரதேசத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கோவா, உத்தராகண்ட் மாநிலங்களில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது. இன்று தேர்தல் நடக்கும் மூன்று மாநிலங்களிலும் ஆளுங்கட்சியாக இருப்பது பாஜக. உத்தராகண்டிலும், கோவாவிலும் பாஜகவை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தீவிரமாகக் களம் காண்கிறது. ஆம் ஆத்மி கட்சி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளும் களத்தில் இருக்கின்றன.

உத்தர பிரதேசத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி போன்றவையும் களத்தில் இருந்தாலும், நேரடிப் போட்டி பாஜகவுக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும்தான்.

உத்தர பிரதேசத்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 55 தொகுதிகளில், பிஜ்னோர். சம்பல், சஹாரன்பூர் மாவட்டங்களில் உள்ள 8 முக்கியத் தொகுதிகளும் அடக்கம். முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் இப்பகுதிகளில் சமாஜ்வாதி கட்சி பலமான நிலையில் இருக்கிறது.

சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் ஆசம் கான், பாஜகவிலிருந்து சமாஜ்வாதி கட்சிக்குத் தாவிய தரம் சிங் சைனி, உத்தர பிரதேச நிதியமைச்சர் சுரேஷ் கன்னா ஆகியோர் இன்று போட்டியிடும் வேட்பாளர்களில் முக்கியமானவர்கள்.

ராம்பூர் தொகுதியில் போட்டியிடும் ஆசம் கான், தனது மகனின் பிறப்புச் சான்றிதழில் முறைகேடு செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டவர். சிறையில் இருந்தபடியே தேர்தலில் அவர் போட்டியிடுகிறார். அவரது மகன் அப்துல்லா ஆசம் சுவார் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்துப் போட்டியிடும் ஹைதர் அலி கான், ராம்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். முன்னாள் எம்.பி நூர் பானுவின் பேரனான ஹைதர், பாஜகவின் கூட்டணிக் கட்சியான அப்னா தளம் (சோனேலால்) கட்சியின் சார்பில் களம் காண்கிறார்.

70 தொகுதிகளைக் கொண்ட உத்தராகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலைப் பொறுத்தவரை, முதல்வர் புஷ்கர் சிங் தாமி, அமைச்சர்கள் சத்பால் மஹராஜ், சுபோத் உனியால், அர்விந்த பாண்டே, தான் சிங் ராவத் உள்ளிட்டோர் பாஜக சார்பில் போட்டியிடும் முக்கியத் தலைகள். காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத், கட்சியின் மாநிலத் தலைவர் கணேஷ் கோதியால் ஆகியோர் முக்கியமான வேட்பாளர்கள்.

40 தொகுதிகளே கொண்ட சிறிய மாநிலமான கோவாவில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, திரிணமூ காங்கிரஸ் எனப் பல்முனைப் போட்டி நிலவுகிறது. கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பர்ரிகரின் மகன் உத்பல் பர்ரிகர், கட்சியில் சீட் கொடுக்கப்படாததால் சுயேச்சையாகப் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

x