ஹிஜாப் விவகாரம்: உடுப்பி பள்ளி பகுதிகளில் 144 தடை உத்தரவு!


கர்நாடகத்தில் தொடரும் ஹிஜாப் - காவி விவகாரத்தில், புதிய நடவடிக்கையாக உடுப்பி மாவட்டத்திலுள்ள பள்ளி வளாகங்களைச் சுற்றி 144 தடைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

உடுப்பியில் பள்ளி, கல்லூரி மாணவியர் ஹிஜாப் அணிவதை எதிர்த்து தொடங்கிய போராட்டம், காவி அணிந்த மாணவ மாணவிகளால் அடுத்த கட்டத்துக்கு சென்றது. இவை தொடர்பான கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவாக, ‘இறுதி தீர்ப்பு வெளியாகும் வரை கல்வி நிலையங்களில் ஹிஜாப், காவி உள்ளிட்ட மத அடையாளங்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக’ என்பதை பிறப்பித்தது. மேலும் திங்கள் முதல் பள்ளிகளைத் திறக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து நாளை(பிப்.14, திங்கள்) பள்ளிகளைத் திறப்பது குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் காவல்துறையினர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்தாலோசித்தனர். அதன்படி, பிரச்சினை தீவிரமாக உள்ள உடுப்பி மாவட்டத்தின் உயர்நிலைப் பள்ளி வளாகங்களைச் சுற்றி 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.

இதன்படி பள்ளியிலிருந்து 200மீட்டர் சுற்றளவில் எவரும் போராட்டம் நடத்துவதோ, கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தவோ அனுமதி இல்லை. மேலும் 5 பேருக்கு மேல் அப்பகுதியில் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த 144 தடை உத்தரவு, பிப்.14 காலை 6 மணிக்குத் தொடங்கி, பிப்.19 மாலை 6 மணி நீடிக்க உள்ளது.

x