பதறும் பஞ்சாப் பெரு விவசாயிகள்


பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் தலைவர்கள் கடும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இருப்பினும் மாநில முதலமைச்சர் சரண்ஜீத் சிங் சன்னிக்கும் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையில் நிழல் யுத்தம் நடக்கிறது. மாநில முதலமைச்சராக யார் இருப்பார்கள் என்பதைச் சொல்லாமல் தேர்தலைச் சந்திப்பது சரியாக இருக்காது என்று காங்கிரஸ் ஆதரவாளர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். ஆம் ஆத்மி கட்சி, பாஜக கூட்டணி போன்றவை முதலமைச்சர் வேட்பாளர் பெயரை அறிவித்த பிறகு காங்கிரஸ் அறிவிக்காமலிருப்பது சரியாக இருக்காது என்று கட்சிக்காரர்கள் தலைமையிடம் முறையிட்டனர். சரண்ஜீத் சிங் சன்னியை முதலமைச்சராக தேர்ந்தெடுத்தபோது, பட்டியல் இனத்தவருக்கு காங்கிரஸ் அளித்துள்ள முக்கியத்துவம் குறித்து அந்த மாநிலத்தில் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் காங்கிரஸார் பெருமைகொண்டனர். எனவே அவரையே மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராகத் தலைமை அறிவித்தது.

மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை, ஓராண்டுக்கும் மேலாக டெல்லிக்கு அருகில் முகாமிட்டு திரும்பப்பெற வைத்ததில் பஞ்சாப் மாநில விவசாயிகளின் பங்கு அளப்பரியது. அந்தப் போராட்டத்தை அவர்கள் திட்டமிட்ட விதமும் நடத்திய விதமும் உலகையெல்லாம் ஈர்த்தது. இப்போது கனடாவில் கோவிட்-19 தடுப்பூசியைக் கட்டாயமாக்குவதை எதிர்த்து ஆயிரக்கணக்கான லாரி (டிரக்) டிரைவர்கள் நடத்திவரும் சாத்வீகப் போராட்டம் பஞ்சாப் விவசாயிகளின் போராட்டத்தை அடியொற்றியதுதான்.

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களில் முன்னிலை வகித்தவர்கள் பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களைச் சேர்ந்த பெரு விவசாயிகள்தான். அத்துடன் மேற்கு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜாட் சீக்கியர் மற்றும் சீக்கியர் அல்லாத விவசாயிகளும் முழு ஒத்துழைப்பு அளித்தனர். சரண்ஜீத் சிங் சன்னி தலைமையிலான அரசு, 2021 டிசம்பர் 10-ல் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையின் புகைப்பட நகல் மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளிடம் அதிலும் குறிப்பாக பெரு விவசாயிகளிடம் வாட்ஸ்-அப் மூலம் சுற்றுக்கு விடப்பட்டுள்ளது. அதுதான் இப்போது கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. நிலச் சீர்திருத்த சட்ட உச்ச வரம்பை மீறி, யாரெல்லாம் நிலம் வைத்திருக்கிறார்கள் என்று அறியும் முயற்சி ஏன் என்று அவர்கள் தங்களுடைய நண்பர்கள் உறவினர்களிடம் இடைவிடாது கேட்டு வருகின்றனர்.

1972-ம் ஆண்டு இயற்றப்பட்டது நிலச் சீர்திருத்த சட்டம். அதை மீறும் வகையில், அரசு அனுமதிக்கும் அளவுக்கும் அதிகமாக நிலம் வைத்திருப்பவர்கள் யார் யார், அவர்களிடம் உள்ள நிலங்களின் அளவு எவ்வளவு என்று விரைவில் தரவுகளைத் திரட்டித் தருமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும் அந்த சுற்றறிக்கை கேட்டுக்கொண்டது. ஆனால் யாருடைய ஆலோசனையின் பேரிலோ சில மணி நேரங்களுக்கெல்லாம், அந்த ‘சுற்றறிக்கை மீது இப்போது நடவடிக்கை வேண்டாம்’ என்று உத்தரவு பறந்தது. அந்த சுற்றறிக்கை தவறாக அனுப்பப்பட்டுவிட்டது என்றோ, செல்லாது என்றோ அறிவிக்கப்படவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று புரிந்துகொள்ள முடிகிறது.

நிலமற்ற மற்றும் கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களின் தொழிற்சங்கத் தலைவர்கள் கடந்த டிசம்பர் மாதம் முதலமைச்சர் சன்னியைச் சந்தித்து தங்களுடைய பிரச்சினைகளை எடுத்துரைத்தனர். அதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட சன்னி, நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு நிலங்களைப் பிரித்துக் கொடுப்பதற்கு வசதியாக உபரி நிலங்களைக் கண்டறிய உடனடியாக பிறப்பித்ததுதான் அந்த சுற்றறிக்கை என்று விவசாயிகள் ஊகிக்கின்றனர்.

பஞ்சாபில் கோதுமை, அரிசி, கரும்பு உள்ளிட்ட விளைபொருள்களை வேளாண் கூட்டுறவுச் சங்கங்களில் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் அர்த்யாஸ் என்று அழைக்கப்படும் தரகர்கள். அவர்கள் பெரிய விவசாயிகளின் பிரதிநிதிகள். விளைபொருள்களை யார் வேண்டுமானாலும் இந்தியாவின் எந்தச் சந்தையிலும் விற்றுக்கொள்ளலாம் என்று கூறும் சட்டமும், ரத்தான மூன்று மத்திய சட்டங்களில் ஒன்று. மோடி அரசு, விவசாயத்தை பெரு நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்காக செய்த ஏற்பாடுதான் இந்தச் சட்டங்கள் என்று கூறி அதை ரத்து செய்ய வைக்க விவசாயிகள் போராட்டம் நடத்தினர். சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டாலும், மத்தியிலும் மாநிலங்களிலும் பாஜக அரசு பதவியில் இருக்கும்வரை விவசாயிகளுக்குத் துயரம் தொடர்கதைதான், எனவே அவர்களுக்கு ஆதரவு தரக்கூடாது என்று விவசாயிகள் தங்களுடைய கூட்டங்களில் பேசி வருகின்றனர். இந்நிலையில் பஞ்சாபை ஆளும் காங்கிரஸ் அரசின் இந்த சுற்றறிக்கை பெரிய விவசாயிகளிடம் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது தேர்தலில் எதிரொலிக்குமா என்று தெரியவில்லை.

காங்கிரஸ் தலைமை உடனே விழித்துக்கொண்டு அவர்களைச் சமாதானப்படுத்த வேண்டும். நிலச் சீர்திருத்த நோக்கிலும் ஏழ்மையை ஒழிக்கும் முயற்சிகளிலும் அந்த சுற்றறிக்கை வரவேற்கத்தக்கதே. எப்போதுமே சீர்திருத்தங்களால் பலன் அடைகிறவர்களுக்கு அரசியல் செல்வாக்கு குறைவு, அவற்றால் இழப்பை சந்திப்போம் என்று அஞ்சுகிறவர்களுக்கு அந்த செல்வாக்கு அதிகம். எனவே இது நிச்சயம் தேர்தல் முடிவில் எதிரொலிக்கும். இதை ஆஆக எப்படி பயன்படுத்திக் கொள்ளும் என்பது இன்னொரு கேள்வி.

பஞ்சாப் நில உச்சவரம்பு சட்டப்படி நஞ்சை நிலமானால் 17.5 ஏக்கர், புஞ்சை நிலமானால் 52 ஏக்கர் வரை ஒரு விவசாயி வைத்துக்கொள்ளலாம். பெரு விவசாயிகள் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். நில உச்சவரம்புக்கும் அதிகமான அளவு நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் பஞ்சாபில் 60,000 முதல் 61,000 வரையில் இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. தென்னிந்திய மாநிலங்களைப் போல நில உடைமையாளர் பதிவேடுகள் பஞ்சாபில் அவ்வப்போது புதிதாகத் திருத்தப்படுவதில்லை. எனவேதான் அரசு, தரவுகளைத் திரட்டித்தருமாறு ஆட்சியர்களை முதலில் அறிவுறுத்தியது. பஞ்சாப் விவசாயிகளில் பலர் வெளிநாடுகளில் சம்பாதித்து சேர்த்த பணத்தைக் கொண்டும் மேற்கொண்டு நிலங்களை வாங்கியுள்ளனர். அவர்கள் அந்த நிலங்களை விட்டுத்தர மாட்டார்கள். தேர்தலுக்குப் பிறகு இது தொடர்பாக என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும். தொழில், வியாபாரத்தில் ஒருவர் எத்தனை கோடி வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம், எத்தனை கோடி ரூபாயைச் செலவிட்டும் வீடு கட்டலாம் என்னும்போது விவசாய நிலங்களுக்கு மட்டும் ஏன் உச்ச வரம்பு என்று பெரிய விவசாயிகள் கேட்கின்றனர்.

x