‘மாஸ்க் இல்லா மகாராஷ்டிரா’: அதிகரிக்கும் ஆதரவும் எதிர்ப்பும்!


மகாராஷ்டிரா மாநிலத்தில் முகக்கவசம் இனி தேவையில்லை என்ற சுகாதார அமைச்சரின் யோசனைக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் அதிகரித்து வருகின்றன.

கரோனா அலைகள் தீவிரமாக இருந்த காலங்களில் நாட்டிலேயே அதிக பாதிப்பு கண்ட மாநிலமாக மகாராஷ்டிரா இருந்தது. ஆனால் தற்போது அங்கு குறைந்து வரும் தொற்று வீதம் காரணமாக, கரோனா கட்டுப்பாடுகளில் இருந்து விடுபடும் கோரிக்கை எழுந்துள்ளது. ‘மாஸ்க் ஃபிரீ மகாராஷ்டிரா’ என்ற பிரச்சாரம் அதிகரித்து வருகிறது.

அந்த குரல்களுக்கு செவி சாய்க்கும் வகையில் மாநில சுகாதாரத்துறை அமைச்சரான ராஜேஷ் டோப், ‘மாநிலத்தில் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்ற நிலை விரைவில் வரும். தொற்று வீதம் வெகுவாக குறைந்த நிலையில், முகக்கவசம் அணிவது இனியும் அவசியமா என்பது குறித்து கரோனா சார்ந்த மத்திய, மாநில மருத்துவ நிபுணர்கள் ஆராய்ந்து தெரிவிக்க வேண்டும்’ என்றார். அமைச்சரவையில் இது தொடர்பான விவாதங்களும் அரங்கேறின. அமைச்சரின் இந்த கருத்துக்கு, பொதுமக்கள் அதிகளவில் ஆதரவு தெரிவித்து சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால் அமைச்சரின் இந்த கருத்து வெளியான ஒரே நாளில் எதிர்ப்புகளும் கணிசமாக அதிகரித்திருக்கின்றன. ஐரோப்பிய நாடுகளை முன்னுதாரணமாக்கி அமைச்சர் ராஜேஷ் டோப், மகாராஷ்டிராவில் முகக்கவச விலக்கு அறிவிக்க முயற்சிப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற கண்டனம் எழுந்துள்ளது.

துணைமுதல்வரான அஜீத் பவார், ‘மாநிலத்தில் முழுமையாக கரோனா குறையும் வரை முகக்கவசம் தொடரும். மக்கள்தொகையில் குறைவான, மக்கள் நெருக்கமும் குறைந்த, மாசுபாடு இல்லாத ஐரோப்பிய நாடுகளோடு, மகாராஷ்டிராவை ஒப்பிட முடியாது. இங்குள்ள மக்கள் செறிவுக்கு முகக்கவசம் மிகவும் அவசியம்’ என்றார்.

மும்பை மாநகராட்சியின் கூடுதல் ஆணையரான சுரேஷ் ககானி என்பவர், ’முகக்கவசம் மட்டுமன்றி மும்பை மக்களிடையே சோப்பு போட்டு கைகழுவும் பழக்கம் அதிகரித்திருப்பதால், இதர வைரஸ் தொற்றுகளின் பாதிப்பு வெகுவாய் குறைந்திருக்கிறது. கட்டாய முகக்கவசம் காரணமாக காசநோயின் பரவலும் குறைந்திருக்கிறது. மும்பை போன்ற மாசு அதிகமான நகரங்களுக்கு கரோனா இல்லாத காலத்திலும் பொதுஇடங்களில் முகக்கவச நடைமுறைகளை தொடர்வதே நல்லது’ என வலியுறுத்தி இருக்கிறார்.

x